நூறு ஆண்டு வரலாறு பல கோடிக்கு வியாபாரம் 2 ஆயிரம் ஆண்டு வரலாறு இருந்தும் சும்மா இருக்கிறோம்: கோயிலில் படம் எடுப்பதை எதிர்ப்பதா? ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கண்டிப்பு

மதுரை: நூறு ஆண்டு வரலாறை கொண்ட அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அதனை பல கோடிக்கு வியாபாரம் செய்யும்போது, 2 ஆயிரம் ஆண்டு வரலாறு இருந்தும் சும்மா இருக்கிறோம் என ஐகோர்ட் கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர் மதுரை, கோ.புதூரைச் சேர்ந்த வக்கீல் உதயகுமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை மீனாட்சியம்மன் கோயில் உலக பிரசித்தி பெற்றது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் கேமரா உள்ளிட்ட மின்னணு பொருட்களை கொண்டு செல்ல அனுமதியில்லை. குறிப்பாக கோயிலுக்குள் உள்ள சிலைகள் மற்றும் சிற்பங்களை புகைப்படம் எடுக்க அனுமதி கிடையாது.

கோயிலில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க ஒப்பந்ததாரர்களைத் தவிர தனிநபர்களுக்கு அனுமதியில்லை. கருவறைக்குள் புகைப்படமோ, வீடியோவோ எடுக்க யாருக்கும் அனுமதி இல்லை. கோயிலின் திருவிழாக்கள் மற்றும் முக்கிய நிகழ்ச்சிகளில் மட்டும் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் சில புகைப்பட நிறுவனத்தினர் மீனாட்சியம்மன் கோயில் சிற்பங்கள் மற்றும் சிலைகளின் புகைப்படங்களுடன் தங்களது நிறுவன லோகோவை இணைத்து சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர்.

எனவே, அனுமதியின்றி எடுக்கப்பட்ட சிற்பங்கள் மற்றும் சிலைகளின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கவும், தனிநபர்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுக்காமல் இருப்பதை உறுதிப்படுத்துமாறும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. கோயில் தரப்பில், ஒப்பந்தப்படியே புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுக்கப்படுகிறது என கூறப்பட்டது.

அப்போது நீதிபதிகள், அமெரிக்கா போன்ற பல நாடுகளில் நூறு ஆண்டு வரலாற்றை கொண்டவற்றை புகைப்படம் எடுத்து புராதன சின்னங்கள் எனக் கூறி பல கோடிக்கு வியாபாரம் செய்கின்றனர். நாம் 2 ஆயிரம் ஆண்டு வரலாற்றை வைத்துக் கொண்டு சும்மா இருக்கிறோம். இதுபோன்ற மனுக்களை ஏற்க முடியாது. அபராதத்துடன் தள்ளுபடி செய்ய நேரிடும் என்றனர்.
இதையடுத்து மனுவை திரும்ப பெறுவதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.

The post நூறு ஆண்டு வரலாறு பல கோடிக்கு வியாபாரம் 2 ஆயிரம் ஆண்டு வரலாறு இருந்தும் சும்மா இருக்கிறோம்: கோயிலில் படம் எடுப்பதை எதிர்ப்பதா? ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கண்டிப்பு appeared first on Dinakaran.

Related Stories: