ஆங்கில புத்தாண்டு தினத்தில் ஆழியார் அணையில் குவிந்த பயணிகள்

பொள்ளாச்சி : பொள்ளாச்சியை அடுத்த ஆழியார்அணை மற்றும் குரங்கு அருவியில் நேற்று  ஆங்கில புத்தாண்டு தினத்தில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர். பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணைக்கு உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.  பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை என்பதால், கடந்த 10 நாட்களாக ஆழியாருக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக காணப்பட்டது. இதில் நேற்று, ஆங்கில புத்தாண்டு தினத்தையொட்டி  ஆழியார் அணைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் அதிகளவில் வந்திருந்தனர். ஆழியார் அணை மற்றும் அருகே உள்ள பூங்காவின் அழகை ரசித்த சுற்றுலா பயணிகள்,  வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குரங்கு அருவிக்கும் சென்றனர்.

குரங்கு அருவியில் தண்ணீர் ரம்மியமாக ஆர்ப்பரித்து கொட்டியது. பயணிகள் வெகுநேரம் அருவியில் நின்று குளித்து மகிழ்ந்தனர். நேரம் செல்ல செல்ல  கூட்டம் அலைமோதியது. இதனால் சிலர் குளிக்காமல் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டது. குரங்கு அருவியில் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக இருந்ததால், கூடுதல் வனத்துறை ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். நவமலை பகுதிக்கு செல்ல முயன்ற சில சுற்றுலா பயணிகளை, வனத்துறையினர் எச்சரித்து திருப்பி அனுப்பினர்.  நேற்று ஒரே நாளில் மட்டும், ஆழியார்  அணைக்கு சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்திருந்ததாக  பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

படகு சவாரி ரத்தானது:

ஆழியார் அணையின்  ஒரு பகுதியில் விடப்படும் படகில்  சவாரி செய்ய  சுற்றுலா பயணிகள் அதிக  ஆர்வம் காட்டினர். ஆனால் காலை நேரம் முதலே அடிக்கடி மலைப்பகுதியில் பலத்த காற்று  வீசியதால் படகு சவாரி ரத்து  செய்யப்பட்டது.  தொடர்ந்து படகு இல்ல பகுதிக்கு செல்ல தடை உள்ளது குறித்து அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இதனால், படகு சவாரி செய்யலாம் என வந்த சுற்றுலா பயணிகள்  ஏமாற்றத்தில் திரும்பி சென்றனர்.

Related Stories: