சித்தூர் அடுத்த அனுப்பு கிராமத்தில் 4 ஆண்டுகளுக்கு முன் கைவிடப்பட்ட சாலையை சீரமைக்க வேண்டும்

*குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டரிடம் மனு

சித்தூர் : சித்தூர் அடுத்த அனுப்பு கிராமத்தில் 4 ஆண்டுகளுக்கு முன் கைவிடப்பட்ட சாலையை சீரமைத்து தார் சாலை அமைக்க வேண்டும் என அக்கிராம மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.சித்தூர் கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நேற்று மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் மோகன் தலைமையில் நடைபெற்றது. இதில், சித்தூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக கலெக்டரிடம் வழங்கினார்கள். பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 187 கோரிக்கை மனுக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் மோகன் உத்தரவிட்டார்.
இந்நிலையில், சித்தூர் அடுத்த அனுப்பு கிராமத்தை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

நாங்கள் மேற்கண்ட கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்களுடன் வசித்து வருகிறோம். எங்கள் கிராமத்திற்கு சாலை வசதி உள்ளது. ஆனால் கடந்த ஆட்சியில் தார் சாலை அமைக்க ஜல்லி கற்கள் கொட்டி சீர் செய்தார்கள். ஆனால் அதற்குள் தேர்தல் வந்ததால் தார் சாலை அமைக்கும் பணி கைவிடப்பட்டது. தற்போது நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் எங்கள் கிராமத்திற்கு தார் சாலை அமைக்கவில்லை.

இதனால் சாலை குண்டும் குழியுமாக மாறி பொதுமக்கள் பயண்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், மாணவ, மாணவிகள் சைக்கிள்களில் பள்ளிகளுக்கு செல்லும்போது ஜல்லி கற்களால் கீழே விழுந்து காயமடைகின்றனர். முறையான சாலை வசதி இல்லாததால் எவ்வித போக்குவரத்தும் இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே எங்கள் கிராமத்திற்கு முறையாக தார் சாலை அமைக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

சித்தூர் அடுத்த கொள்ள பள்ளி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியதாவது:எங்கள் கிராமத்தில் 120க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கிராமத்திற்கு செல்ல ஒருவழி பாதை மட்டுமே உள்ளது. வாகனங்களில் கிராமத்திற்கு செல்ல வேண்டுமானால் 3 கிலோ மீட்டர் சுற்றி செல்லும் அவல நிலை ஏற்படுகிறது. இதனால், பள்ளி செல்லும் குழுந்தைகள், அலுவலகம் செல்வோர் என பலதரப்பட்ட மக்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.

மேலும், அவசர கால சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்வோர் 3 கிலோ மீட்டர் சுற்றி செல்வதால் அதிக உயிர் சேதம் ஏற்படுகிறது. எனவே எங்கள் கிராமத்திற்கு செல்ல தற்போது இருக்கும் 500 மீட்டர் ்தொலைவில் உள்ள ஒரு வழி பாதையை அகலப்படுத்தி சிமெண்ட் சாலை அமைத்து எங்கள் வாழ்வாதாரம் முன்னேற வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.இதில், மாவட்ட இணை கலெக்டர் சீனிவாஸ், டிஆர்ஓ ராஜசேகர் உள்பட ஏராளமான அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

The post சித்தூர் அடுத்த அனுப்பு கிராமத்தில் 4 ஆண்டுகளுக்கு முன் கைவிடப்பட்ட சாலையை சீரமைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: