கண் பார்வை, மனநிலை பாதிக்கும் குழந்தைகளிடம் செல்போன் தராதீங்க…பெற்றோர்களை எச்சரிக்கும் மருத்துவர்கள்

முன்பு ஒரு காலத்தில் ஒரு சிலரிடம் மட்டுமே செல்போன் என்பது இருந்தது. தற்போது அனைவரிடமும் இருக்கும் ஒரு முக்கிய பொருளாக செல்போன் மாறிவிட்டது. ஆண்கள், பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினரிடையேயும் அதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது.செல்போன் மூலம் நெருங்கியவர்களுடனான வாட்ஸ்அப் உரையாடல் தொடங்கி, சமூக வலைத்தளங்களில் நேரத்தை செலவழிப்பது, செய்திகளை நொடிக்கு நொடி தெரிந்து கொள்வது, வங்கியில் பணப்பரிவர்த்தனை என அனைத்துக்கும் அவசியமாகி விட்டது. இவ்வாறு பல்வேறு வசதிகள் கொண்ட செல்போனை பயன்படுத்தாதவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. என்னதான் பல்வேறு வசதிகள் இருந்தாலும் செல்போனினால் ஏற்படும் ஆபத்துகள் அதிகம்.

குறிப்பாக, செல்போனால் குழந்தைகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். அவ்வாறு குழந்தைகள் பாதிப்பு அடைவதற்கு பெரும்பாலும் பெற்றோர்களே காரணமாகவும் இருக்கின்றனர். குழந்தைகள் சாப்பிடுவதற்கு, ஏதாவது ஒன்றுக்கு அடம்பிடித்தால் சமாதானப்படுத்த முந்தைய காலத்தில் விளையாட்டு பொருட்களை காட்டியும், வீட்டின் வெளியே அழைத்து சென்று வேடிக்கை காட்டுவதும் வழக்கம். இப்போதைய காலகட்டத்தில் அடம்பிடிக்கும் குழந்தைகள், சாப்பிட மறுக்கும் குழந்தைகள், குறும்புத்தனம் செய்து கொண்டிருக்கும் குழந்தைகள் என அனைவரையும் சமாளிப்பதற்கு பெற்றோர் அவர்களின் கைகளில் செல்போனை கொடுத்து விடுகின்றனர். அதில் குழந்தைகள் யூ-டியூப்பை பயன்படுத்தி பொம்மை படங்கள் பார்ப்பது, கேம் விளையாடுவது என முழு செல்போனையும் பயன்படுத்தி, அதிலுள்ள நுட்பங்களை கரைத்துக்குடித்து விடுகின்றனர்.

இவ்வாறு நாட்கள் செல்ல செல்ல குழந்தைகள் தாங்களாகவே வீட்டிலிருந்து செல்போனை எடுத்து பயன்படுத்த தொடங்கி விடுகின்றனர். இதுபோன்று பெற்றோர்களே குழந்தைகளை ஆபத்தில் தள்ளிவிடும் நிலைமை தற்போது அதிகரித்து வருகிறது. பெரும்பாலான பெற்றோர்களுக்கு குழந்தைகளை சமாதானம் செய்ய செல்போன் ஒரு ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது. இதனால், குழந்தைகளிடம் செல்போனை கொடுப்பதால் அவர்கள் சமாதானம் ஆகலாம். அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னவென்று யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

அதுபோல, பெரும்பாலான பள்ளிகளில் குழந்தைகளுக்கு கொடுக்கும் ஹோம் வொர்க், அசைன்மென்ட், பள்ளி சம்பந்தமான தகவல்கள் என அனைத்தையும் பெற்றோரின் செல்போன்களுக்கு அனுப்புகின்றனர். அதனால் பள்ளி விஷயங்களிலும் சில சமயங்களில் பெற்றோர்களால் குழந்தைகளிடம் இருந்து செல்போன்களை தவிர்க்க முடியவில்லை. இதனால் சிறு வயதில் இருந்தே குழந்தைகளுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. இந்தியாவை பொறுத்தவரை சுமார் 73 சதவீத குழந்தைகள் செல்போனை பயன்படுத்தி வருவதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் மனநோய் மற்றும் கண் பாதிப்புகளுக்கு உள்ளாவதாக அதிர்ச்சி தகவல் ஒன்று சமீபத்தில் வெளியாகியுள்ளது.

அதிக நேரம் செல்போன் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு கிட்டப்பார்வை, மாறு கண், மனச்சோர்வு, பயம், கவலை மற்றும் எரிச்சல் உணர்வு போன்ற மனரீதியான பிரச்னைகள் அதிகரித்து உள்ளதாகவும், ஆன்லைன் கேம், யூ-டியூப் வீடியோ, சமூக வலைதளங்கள் என அதிக நேரம் குழந்தைகள் செல்போனில் செலவிடுவதால் குழந்தைகளின் மனநிலை பாதிக்கப்படுவதுடன் அவர்கள் இயல்பாக யாரிடமும் பேசுவதில்லை எனவும் ஆய்வுகள் தெரிவிக்கிறது. இந்தியாவை தவிர்த்து சில நாடுகளில் செல்போன் மோகம் படிப்படியாக குறைந்து விட்டதாகவும், அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் 32 சதவீத குழந்தைகள் மட்டுமே செல்போன்களை பயன்படுத்துகின்றனர் என கூறப்படுகிறது. எனவே பெற்றோர்கள், குழந்தைகளை செல்போன்களை பயன்படுத்தாமல் பார்த்துக் கொள்வதோடு, அவர்களுடன் எப்போதும் நேரத்தை செலவிட்டு ஆரோக்கியமாக வளர்த்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இதுதொடர்பாக, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் குழந்தைகள் கண் மருத்துவர் மற்றும் மாறு கண் சிகிச்சை நிபுணர் பத்மபிரியா கூறியதாவது:
குழந்தைகள் செல்போன்களை பயன்படுத்துவது கொரோனாவுக்கு பின்னர் மிகவும் அதிகரித்துள்ளது. இதுபோன்று பயன்படுத்திவதால், முழு உடலையும் பாதிப்புக்குள்ளாக்கும். அதிலும் குறிப்பாக கண்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படும். அவ்வாறு ஏற்படும் பாதிப்புகளில் முதல் பாதிப்பு கிட்டப்பார்வை, குழந்தைகள் செல்போன்களை கண்களுக்கு கிட்டே வைத்து பார்ப்பதால், கண்களுக்கு கிட்டே இருக்கும் பொருட்கள் அவர்களுக்கு எளிதாக தெரியும், இதுவே அவர்கள் பள்ளிக்கு சென்று படிக்கும்போது தொலைவில் இருக்கும் கரும்புலகை உள்ளிட்டவை அவர்களுக்கு மங்கலாக தெரியும் நிலை ஏற்படும். இதுபோன்ற பாதிப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணம் கொரோனா காலத்தில் பள்ளி மற்றும் கல்லூரி வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடந்ததுதான். ஆன்லைன் வகுப்புகளில் குழந்தைகள் செல்போன் மூலம்தான் பங்கேற்றனர். அப்போது, அவர்களுக்கு அனைத்தும் எளிதாக தெரிந்ததாக இருந்தது, பின்னர் பள்ளிக்கு சென்று படிக்கும்போது தூரத்தில் இருக்கும் எழுத்துக்கள் தெரியாத ஒருநிலை ஏற்பட்டது. இதுபோன்ற பாதிப்புகள் ஏற்பட்ட குழந்தைகளை பரிசோதித்து பார்த்தபோது அவர்களுக்கு கிட்டப்பார்வை இருப்பது தெரியவந்து. பின்னர், அதற்கான சிகிச்சைகள் அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. செல்போனினால் தான் இந்த பிரச்னை ஏற்பட்டது என்று தெரியாத பெற்றோர் குழந்தைகள் கொரோனா காலத்தில் வீட்டில் இருந்தபோது நன்றாக படித்தார்கள். ஆனால், தற்போது பள்ளிக்கு செல்லும்போது சரியாக படிப்பதில்லை என நினைத்துக் கொள்கிறார்கள்.

இரண்டாவது, அறிவுசார் திறன்கள், ஒரு குழந்தை என்றால் வெளியே ஓடிசென்று விளையாட வேண்டும், ஒரே இடத்தில் அமர்ந்து செல்போன்களை பயன்படுத்துவது உட்கார்ந்த வாழ்க்கை பழக்கம் என சொல்வார்கள். அதேபோல அதிகப்படியான செல்போன் பயன்பாட்டால் குழந்தைகளுக்கு கண்களில் வறட்சி அதிகம் ஏற்படுகிறது. ஒரு பொருளை ஆர்வமாக குழந்தைகள் பார்க்கும் போது கண் இமைகளை அசைக்கக்கூட மறுக்கின்றனர், இதனை பீடியாட்ரிக் டிரைனஸ் என கூறுவோம். இதுதவிர கொரோனா காலத்திற்குப் பின்னர் செல்போன் பயன்பாட்டினால் தற்போது மாறு கண் ஏற்படுகிறது. தொடர்ந்து 3 மணி நேரம், 4 மணி நேரம் அல்லது அதற்கும் மேலாக என செல்போன்கள் பயன்படுத்துவதால், கண்களின் பேலன்ஸ் இழந்து மாறு கண் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இந்த பாதிப்புகள் அதிகரித்திருப்பது கொரோனா காலத்திற்கு பின்னர் தான். கொரோனா காலத்தில் ஹோம் ஒர்க், அசைன்மென்ட் என அனைத்தும் செல்போன்கள், டேப்லெட்கள் மூலம் தான் குழந்தைகள் பயன்படுத்தி வந்தனர். இவ்வாறு தொடர்ந்து பள்ளிகளில் இருந்து குழந்தைகளுக்கு செல்போன் மற்றும் டேப்லெட் மூலம் தான் ஹோம் ஒர்க், அசைன்மென்ட் வருகிறது என்றால் அவற்றை செல்போன்கள், டேப்லெட்களை தவிர்த்து ஸ்மார்ட் டிவி மூலம் சிறிது தூரத்தில் இருந்து குழந்தைகள் பயன்படுத்த உதவி செய்ய வேண்டும். அதோடு குழந்தைகள் வெளியே சென்று அதிக நேரம் விளையாட வேண்டும். குறிப்பாக சூரிய ஒளி மேலே படும் அளவிற்கு குழந்தைகள் ஓடியாடி உடல் வேர்க்கின்ற அளவிற்கு விளையாடுவது மிகவும் முக்கியம். குறிப்பாக, பெற்றோர்கள், குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டு விளையாடுவது, குடும்பமாக ஒன்றாக அமர்ந்து சாப்பிடும்போது, அன்றன்று நடக்கும் நிகழ்வுகளை பகிர்ந்து கொள்வது என இருக்க வேண்டும்.

குழந்தைகளிடம் பேசுவதால் நம்முடன் அதிகப்படியான நேரத்தை செலவிடுவார்கள், செல்போன் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தும் எண்ணம் படிப்படியாக குறையும். குழந்தைகள் அதிகப்படியாக செல்போனில் நேரத்தை செலவிடுவதால் அவர்களால் மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுவது, அவர்களுடன் பேசுவது என்பதிலும் இடைவெளி ஏற்படுகிறது. இதனால் சிறுவயதில் குழந்தைகளுக்கு பேச்சு வளர்ச்சியில் தடை ஏற்படுகிறது.
அதேபோல அதிகப்படியான செல்போன் பயன்பாட்டினால் குழந்தைகளுக்கு தூக்கமின்மை பிரச்னைகள் ஏற்படுகிறது. இதனால் குழந்தைகள் மனநிலை பாதிப்பும் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. முன்பு கிட்டப்பார்வை பாதிப்பு ஏற்பட்டு கண்ணாடி அணிவது ஐந்து வயது மற்றும் அதற்கு அதிகமான வயதில் இருக்கும் குழந்தைகள் சிலர்தான். ஆனால் அதிக செல்போன் பயன்பாட்டினால் கொரோனா காலத்திற்கு பின்னர் தற்போது மூன்று வயது குழந்தைகளே பெரும்பாலானோர் கண்ணாடி அணியும் நிலை ஏற்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

தூக்க நேரத்திலும் மாற்றம்
செல்போன் பயன்பாட்டால் குழந்தைகளின் தூங்கும் நேரம் முற்றிலுமாக மாறி விடுகிறது. இரவு 9 மணி அல்லது 9.30 மணிக்கு குழந்தைகளை தூங்க வைத்தால் காலை 6, 6.30 மணியளவில் குழந்தைகள் எழுந்தால் பெற்றோர்கள் நிம்மதியாக தூங்கலாம். ஆனால் குழந்தைகளோ 1 அல்லது 2 மணி வரை செல்போன் உபயோகித்து விட்டு காலை 10 மணிக்கு, 11 மணிக்கு எழுந்திருக்கிறார்கள். இதனால் காலை உணவு குழந்தைகள் சாப்பிட 11 முதல் 11.30 மணிக்கு என்று மாறி விடுகிறது. அதேபோல, வெஸ்டர்ன் டாய்லெட் சீட்டை விட 17 மடங்கு பாக்டீரியாக்கள் நமது செல்போனில் உள்ளதாக ஆய்வுகள் சொல்கின்றன. இப்படி அதிக கிருமிகள் உள்ள செல்போனை குழந்தைகள் இரவு, பகலாக உபயோகிக்கும்போது, அது குழந்தைகளின் உடல்நிலையை பாதிக்கிறது. செல்போன் டவர்களால் சிட்டுக்குருவிகள் அழிகிறது என சொல்லப்படும் நிலையில் சின்னஞ்சிறு குழந்தைகளின் நிலையையும் பெற்றோர்கள் அறிந்திருக்க வேண்டும்.

கிரியேட்டிவிட்டி திறன் பாதிப்பு
பெற்றோர் வேலைக்கு செல்கிறார்கள், வீட்டில் தாத்தா, பாட்டி மட்டுமே இருக்கிறார்கள் என்று இருக்கும் குடும்பத்தில் உள்ள குழந்தைகள் பெரும்பாலானோருக்கு அவர்களது பெற்றோர் செல்போனினால் என்ன பாதிப்பு ஏற்படும் என்று தெரிந்தும் அவர்களிடம் செல்போனை தந்து விடுகின்றனர். காரணம் செல்போன் இருந்தால் அதை பார்த்துக் கொண்டே குழந்தைகள் சாப்பிட்டு விடுவார்கள், வீட்டில் இருப்பவர்களுக்கு தொந்தரவு அளிக்க மாட்டார்கள் என விட்டு விடுகின்றனர். ஆனால் அந்த பழக்கம் நாளடைவில் குழந்தைகளை அடிமையாக்கி விடுகிறது. இதுபோன்ற செல்போன் பயன்பாட்டினால் குழந்தைகளின் கிரியேட்டிவிட்டி திறன் குறைந்து விடுகிறது. குழந்தைகள் சுயமாக யோசித்து எந்த ஒரு செயல்களிலும் ஈடுபடுவதை தவிர்த்து விட்டு மற்றொரு விஷயத்தைப் பார்த்து அதேபோல் செய்ய வேண்டும் என்ற நிலை உருவாகிவிடுகிறது. வெளியே சென்று விளையாடாததால் பிசிகல் ஆக்டிவிட்டீஸ் குறைபாடு ஏற்பட்டு உடல் பருமன் அதிகரிக்கும் நிலையும் ஏற்படுகிறது.

எனவே இவை அனைத்தையும் தவிர்க்க பெற்றோர்கள் குழந்தைகளிடம் அதிக நேரத்தை செலவிட வேண்டும், குழந்தைகளுடன் பெற்றோர் இருக்கும்போது அவர்களும் செல்போனை பயன்படுத்தாமல் இருப்பது அவசியம், முடிந்த அளவிற்கு குழந்தைகளை வீட்டிலிருந்து வெளியே அழைத்து சென்று அவர்களை விளையாட வைக்க வேண்டும், வீட்டில் குழந்தைகள் இருந்தால் அதிகபட்சமாக ஒரு மணி நேரம் மட்டுமே டிவி பார்க்க வேண்டும் என ஒரு கட்டுப்பாட்டை உருவாக்க வேண்டும். குழந்தைகளை ஏதாவது ஒரு ஸ்போர்ட்ஸ் ஆக்டிவிட்டியில் சேர்த்துவிட்டால், அவர்களுக்கு அதில் ஆர்வம் அதிகரிக்கும், அதேபோல கண்டிப்பாக குழந்தைகளுக்கு அடிக்கடி கண் பரிசோதனை செய்ய வேண்டும். ஏனென்றால் குழந்தைகள் ஐந்து, ஆறு வகுப்பு படிக்க தூங்கும்போது தான் தூரத்தில் இருப்பது தெரிகிறதா, தெரியவில்லையா என்பதை தெளிவாக சொல்வார்கள், சிறு குழந்தைகளுக்கு தூரத்தில் இருப்பவை தெரிகிறதா என்பதை சொல்ல தெரியாது. எந்த ஒரு கண் பாதிப்புகள் இல்லையென்றாலும், அவ்வப்போது பரிசோதனை செய்யும்போது குழந்தைகளுக்கு இருக்கும் பாதிப்புகளை முன்கூட்டியே அறிந்து அதற்கான சிகிச்சையை அளிக்க முடியும் என்றார் டாக்டர் பத்மபிரியா.

The post கண் பார்வை, மனநிலை பாதிக்கும் குழந்தைகளிடம் செல்போன் தராதீங்க…பெற்றோர்களை எச்சரிக்கும் மருத்துவர்கள் appeared first on Dinakaran.

Related Stories: