பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே டிராக்டர்-வேன் மோதல் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்க சென்ற ஆம்புலன்ஸ் மீது ஆம்னி பஸ் மோதியதில் தாத்தா, பேத்தி, ஆம்புலன்ஸ் டிரைவர் பரிதாபமாக பலியாயினர்.
திண்டுக்கல் நாகல் நகர் குப்புசாமி(60), அவரது பேத்தி கவிபிரியா(22) உள்பட குடும்பத்தினர் 10 பேருடன் திண்டுக்கல்லில் இருந்து வேனில் திருவண்ணாமலை சென்றனர். பின்னர் அவர்கள் மீண்டும் நேற்று இரவு திருவண்ணாமலையிலிருந்து புறப்பட்டு திண்டுக்கல்லுக்கு வேனில் திரும்பிக் கொண்டிருந்தனர். வேனை திண்டுக்கல் நாகல் நகரைச் சேர்ந்த செல்வராஜ்(48) என்பவர் ஓட்டி வந்தார். இன்று அதிகாலை 2.30 மணியளவில் பெரம்பலூர் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வேன் வந்து கொண்டிருந்தது.
அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த டிராக்டரை முந்த முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த வேன் டிராக்டர் மீது மோதி சென்டர் மீடியனில் ஏறி நின்றது. இதில் டிராக்டரும் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் டிராக்டர் டிரைவர் கிழவன்(45), அவருடன் வந்த சாமிதாஸ் (40), சேகர்(40) மற்றும் வேனில் வந்த குப்புசாமி, கவிபிரியா, கணேசன்(42), கோபால் மனைவி நீலா(65), ஆகியோர் படுகாயமடைந்தனர். காயம் அடைந்தவர்களை மீட்பதற்காக 108 ஆம்புலன்ஸ் வந்தது. ஆம்புலன்ஸ் டிரைவர் ராஜேந்திரன்(45) ஆம்புலன்சின் பின்பக்கம் இருந்து காயமடைந்தவர்களை ஸ்ட்ரெச்சரில் ஏற்றிக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக சென்னையிலிருந்து கன்னியாகுமரி நோக்கி வந்த தனியார் ஆம்னி பஸ் கட்டுப்பாட்டை இழந்து ஆம்புலன்ஸ் மீது மோதியது. இதில் ஆம்புலன்ஸ் ரோட்டோர பள்ளத்தில் பாய்ந்தது.
இந்த விபத்தில் ஆம்புலன்சில் ஏற்றப்பட்ட குப்புசாமி மற்றும் அவரது பேத்தி கவிபிரியா, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ராஜேந்திரன் ஆகிய 3 பேர் அந்த இடத்திலே உடல் நசுங்கி பலியாயினர். இதுகுறித்து தகவலறிந்து வந்த நெடுஞ்சாலை துறை போலீசார், காயமடைந்த 5 பேரை 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பொக்லைன் வரவழைக்கப்பட்டு வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டது. இந்தவிபத்து காரணமாக இன்று அதிகாலை 2.30 மணி முதல் 4 மணி வரை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.விபத்து தொடர்பாக ஆம்னி பஸ் டிரைவர் சுடலை(42), வேன் டிரைவர் செல்வராஜ் ஆகியோரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
The post விபத்தில் சிக்கியவர்களை மீட்க சென்ற ஆம்புலன்ஸ் மீது ஆம்னி பஸ் மோதல் தாத்தா, பேத்தி உள்பட 3 பேர் பலி: 5 பேர் படுகாயம் appeared first on Dinakaran.