பெரும் விபத்து தவிர்ப்பு கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியின் பட்டை வெடித்தது: செங்கோட்டையில் 2 மணி நேரம் நிறுத்தம்

நெல்லை: ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து பல உயிர்களை காவு கொண்டு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நேற்று கொல்லம் – சென்னை எக்ஸ்பிரசின் ரயில் பெட்டியில் பட்டை வெடித்து பெட்டி கிறீச்சிட்ட நிலையில், செங்கோட்டை பகுதியில் விபத்து தவிர்க்கப்பட்டது. கொல்லம் – சென்னை இடையே எக்ஸ்பிரஸ் ரயில் (எண்.16102) புனலூர், தென்காசி, மதுரை வழியாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த எக்ஸ்பிரஸ் வழக்கம்போல் நேற்று மதியம் 12.15 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டது. செங்கோட்டை வரை இந்த ரயில் மலைப்பாதைகள், பல்வேறு பாலங்களை கடந்து வரும். நேற்று மலைப்பகுதிகளை கடந்து மாலை 3.15 மணிக்கு செங்கோட்டை வந்தபோது, ரயிலில் இருந்து வினோத ஒலி கிளம்பியது.

ரயில்வே ஊழியர்கள் பெட்டிகளை பரிசோதித்தபோது, எஸ் 3 பெட்டியில் சட்டம் உடைந்து காணப்பட்டது. அதாவது சக்கரத்திற்கும், பெட்டிக்கும் இடையே பட்டை வெடித்தாற்போல் காட்சியளித்தது. இதனால் ரயிலை இயக்குவது ஆபத்து என்பதை உணர்ந்த ரயில்வே ஊழியர்கள், உடனடியாக செங்கோட்டை ரயில் நிலையத்தில் எஸ்3 பெட்டியை அகற்றினர். அதில் இருந்த பயணிகள் அனைவரும் எஸ் 4 பெட்டியில் ஏற்றப்பட்டனர். இதையடுத்து அங்கிருந்து சுமார் 2 மணி நேரம் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது. மதுரை ரயில் நிலையத்தில் எஸ்3 பெட்டிக்கு பதிலாக மற்றொரு பெட்டி இணைக்கப்பட்டு, பயணிகளுக்கு மாற்று வசதிகள் செய்து தரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post பெரும் விபத்து தவிர்ப்பு கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியின் பட்டை வெடித்தது: செங்கோட்டையில் 2 மணி நேரம் நிறுத்தம் appeared first on Dinakaran.

Related Stories: