பெருந்துறை அருகே சூறாவளிக்காற்றுடன் கனமழை 2 ஆயிரம் வாழைகள் சேதம்: வீட்டின் கூரைகள் காற்றில் பறந்தன

ஈரோடு: ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் இரவு சூறைக்காற்று, இடி, மின்னலுடன் பெய்த மழையால் 2 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்து விழுந்ததோடு, வீட்டின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன. அக்னி நட்சத்திர வெயில் முடிந்தும் ஈரோடு மாவட்டம் முழுவதும் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதேபோல் மாநகரில் நேற்று முன்தினம் பகலில் வழக்கத்தைவிட அதிகமாக வெயில் சுட்டெரித்தது. ஆனால் மாலை முதலே வானில் கருமேகங்கள் சூழ்ந்து குளிர்ந்த காற்று வீச துவங்கியது. இரவு 8.30 மணியளவில் சூறாவளிக்காற்று வீசியதோடு இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்ய துவங்கியது.

பெருந்துறை வாய்க்கால் மேடு பகுதியில் சூறைக்காற்றால் 3.5 ஏக்கர் விளை நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 2 ஆயிரம் வாழைகள் குலை தள்ளிய நிலையில் சூறாவளிக்காற்றால் முறிந்து விழுந்தன. இதே பகுதியில் சூறைக்காற்றில் 15 வீடுகளில் சிமென்ட் சீட்டினால் ஆன மேற்கூரைகள் காற்றில் பறந்து பல அடி தூரம் தூக்கி வீசப்பட்டன. அதேபோல், பெருந்துறை சாலையில் வைக்கப்பட்டிருந்த விளம்பர தட்டிகள், மரங்கள் சாய்ந்தும் சேதமாகின. பல இடங்களில் மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசியதால், இரவு 3 மணி நேரத்திற்கு மேலாக மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.

The post பெருந்துறை அருகே சூறாவளிக்காற்றுடன் கனமழை 2 ஆயிரம் வாழைகள் சேதம்: வீட்டின் கூரைகள் காற்றில் பறந்தன appeared first on Dinakaran.

Related Stories: