நீர்வீழ்ச்சியை ரசித்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்

ஊட்டி: ஊட்டி அருகேயுள்ள பைக்காரா நீர்வீழ்ச்சியை ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து புகைப்படம் எடுத்து சென்றனர். ஊட்டியில் இருந்து 22 கி.மீ., தொலைவில் பைக்காரா படகு இல்லம் மற்றும் நீர்வீழ்ச்சி ஆகியவை உள்ளது. பைக்காரா அணை மின் உற்பத்திக்காக கடந்த பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் அமைந்துள்ள இந்த அணையில் இருந்து, மின் உற்பத்திக்காக தண்ணீர் திறந்து விடும் போது, அணையில் இருந்து வெளியேறும் நீர் பைக்காரா வனப்பகுதிகளின் நடுவே உள்ள ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும். குறிப்பாக பாறைகளின் நடுவே ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுக்கும் காட்சி பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக இருக்கும். சுற்றுலா பயணிகள் கட்டாயம் வருகை தரும் இடம் கூடலூர் சாலையில் அமைந்துள்ளது.

இந்தாண்டு தென்ேமற்கு பருவமழை சுமார் 3 மாதங்களுக்கும் மேல் பெய்த நிலையில், பைக்காரா அணையில் நீர்மட்டம் பெருமளவு உயர்ந்துள்ளது. இதனால் மின் உற்பத்திக்காக திறக்கப்படும் தண்ணீர் பைக்காரா நீர் வீழ்ச்சியில் ஆர்பரித்து கொட்டுகிறது. தற்போது பனியின் காரணமாக குளு குளு காலநிலை நிலவி வரும் நிலையில் நீர்வீழ்ச்சி பகுதியில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஊட்டியில் அதிகம் பேர் முகாமிட்டுள்ளனர். விடுமுறை நாளான நேற்று பைக்காரா நீர்வீழ்ச்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சியை பார்வையிட்டு  செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இதேபோல் பைக்காரா அணையில் இருந்து ஸ்பீட் படகில் பயணிக்கவும் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டினர்.

× RELATED வார விடுமுறையை கொண்டாட கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்