‘காந்த மனிதன்’ ஜோகோவிச்!

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபனில் விளையாடும் முன்னணி நட்சத்திரம் நோவக் ஜோகோவிச் (செர்பியா), ஊடக உலகை மீண்டும் பேச வைத்துள்ளார். கொரோனா தடுப்பு ஊசி போட்டுக்கொள்ள மாட்டேன் என்று உறுதியாக இருப்பதால், வெல்ல வேண்டிய பல கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் அவர் பங்கேற்க முடியாமல் போனது. அந்த சர்ச்சை இன்றும் தொடர்ந்துகொண்டே உள்ளது. சில நாட்களுக்கு முன்பு கொசவா பிரச்னை குறித்து பேசி பிரான்ஸ் அமைச்சர் உட்பட பலரின் கண்டனத்துக்கு உள்ளானார்.

இந்நிலையில், பிரெஞ்ச் ஓபன் 2வது சுற்றில் விளையாடிய ஜோகோவிச், ஆட்டத்துக்கு பிறகு வியர்வையில் நனைந்த சீருடையை மாற்றினார். அப்போது நெஞ்சின் மையப்பகுதியில் நாணயம் போன்ற வில்லை ஒன்று ஒட்டப்பட்டு இருந்தது. அது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, ‘எனக்கு சிறு வயதில் அயர்ன் மேனை (இரும்பு மனிதன்) மிகவும் பிடிக்கும். அதனால் இரும்பு மனிதனாக மாறி இருக்கிறேன்’ என்று கிண்டலாக கூறிச் சென்றார்.

நவீன மருத்துவத்தை விட இயற்கை சார்ந்த மருத்துவ முறைகளில் ஈடுபாடு கொண்டவர் ஜோகோவிச். அதனால் அவர் ஒட்டியிருப்பது வலி நிவாரண காந்த சிகிச்சை சாதனம் என்று சொல்கிறார்கள். அதை பயன்படுத்தினால் நாள்பட்ட வலி அல்லது சோர்வு நீங்கும் என்று நம்புகின்றனர். அதே சமயம் ‘அக்குபஞ்சர் மற்றும் ஒளி சிசிச்சை தொடர்புடைய, நானோ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட காப்புரிமை பெற்ற சாதனம்’ என்றும் தகவல்கள் கசிகின்றன.

The post ‘காந்த மனிதன்’ ஜோகோவிச்! appeared first on Dinakaran.

Related Stories: