மலையில் 10 கி.மீ. நடந்து சென்று ஆய்வு செய்த வேலூர் கலெக்டர் சாலை அமைக்க ₹5.51 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல் பாம்பு கடித்து பலியான குழந்தையின் பெற்றோருக்கு ஆறுதல்

அணைக்கட்டு, மே 30: வேலூர் அருகே அல்லேரி மலையில் பாம்பு கடித்து குழந்தை பலியான சம்பவத்தில், மலைப்பாதையில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் நடந்தே சென்று ஆய்வு செய்தார். அப்போது அல்லேரி மலைக்கு சாலை அமைக்க ஏற்கனவே ₹5.51 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், அல்லேரி மலையில் உள்ள அத்திமர கொல்லை கிராமத்தில் கடந்த 26ம் தேதி இரவு பெற்றோருடன் வீட்டின் வெளியே தூங்கிய ஒன்றரை வயது குழந்தை தனுஷ்காவை பாம்பு கடித்தது. குழந்தையை தூக்கி வந்த பெற்றோர் அணைக்கட்டு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, பாம்பு கடி முறிவு மருந்து செலுத்தப்பட்டு, உயர் சிகிச்சைக்காக ஆம்புலன்சில் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் குழந்தை இறந்துவிட்டது. பிரேத பரிசோதனைக்கு பிறகு, ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்ட குழந்தையின் உடலை, சாலை வசதி இல்லாததால் அல்லேரி மலையடிவாரத்தில் பெற்றோரிடம் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஒப்படைத்தனர். அங்கிருந்து குழந்தையின் உடலை பெற்றோர் மற்றும் உறவினர்கள் கையில் தூக்கியபடி சுமார் 10 கி.மீ. நடந்தே சென்றனர். மேலும் சாலை வசதி இல்லாததே குழந்தையின் உயிரிழப்புக்கு காரணம் என பெற்றோர் மற்றும் கிராம மக்கள் புகார் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று அத்திமரத்துகொல்லை கிராமத்திற்கு நேரில் சென்ற கலெக்டர் குமாரவேல்பாண்டியன், உயிரிழந்த குழந்தை தனுஷ்காவின் தந்தை விஜி, தாய் பிரியா ஆகியோரை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் கலெக்டரின் விருப்ப உரிமை நிதியிலிருந்து ₹25 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினார். முன்னதாக அல்லேரி மலையடிவாரத்தில் இருந்து கலெக்டரின் வாகனம் மண்சாலையில் சிக்கிக்கொண்டது. அதனை ஊழியர்கள் மீட்டனர். மேலும் மலைக்கிராமத்துக்கு செல்ல பாதை இல்லாததால், அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் சென்றார். கலெக்டர் பைக்கை ஓட்டும்போது, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு அவருடன் அமர்ந்து சென்றார். ஆனால் சிறிது தூரம் சென்றதும் பாதை சரியில்லாமல், அத்திமர கொல்லை கிராமத்துக்கு 10 கி.மீ. தூரம் கலெக்டர் நடந்தே சென்றது குறிப்பிடத்தக்கது. பின்னர் பலாமரத்துகொல்லை, வாழைப்பந்தல் ஆகிய கிராமங்களுக்கும் 2 கி.மீ. தூரம் நடந்தே சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுக்கு பின்னர் கலெக்டர் குமார பாண்டியன் கூறியதாவது: கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் வேலூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் தொடர்பாக சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், மாவட்டத்தில் உள்ள மலை கிராமங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். மேலும் முதல்வரின் ஆணைக்கிணங்க வேலூர் வட்டம் குருமலை, அணைக்கட்டு வட்டம் பீஞ்சமந்தை, ஜார்தான்கொல்லை ஆகிய மலைக்கிராமங்களுக்கு சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அல்லேரி மலை கிராமத்திற்கு சாலை அமைக்கும் பணி தொடர்பாக ஏற்கனவே வனத்துறையுடன் இணைந்து நில அளவை மேற்கொள்ளும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட நில அளவை பணிகளின் அடிப்படையில் இந்த பகுதிக்கு தார் சாலை அமைப்பதற்காக ₹5.51 கோடி மதிப்பில் தோராய திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.

அல்லேரி கிராமத்திற்கு சாலை அமைக்க வேண்டிய 5.15 கி.மீ நீளத்தில், 4.8 கி.மீ தூரம் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பகுதியில் சாலை அமைக்க 6 மீட்டர் அகலம் தேவைப்படுவதால், அதில் எவ்வளவு மரங்கள், மண் மற்றும் பாறைகள் அகற்றப்பட வேண்டும் எனவும், எவ்வளவு ஆழத்திற்கு மணல் நிரப்பப்பட வேண்டும் போன்ற பல்வேறு பணிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த பணிகள் நிறைவடைந்த உடன் உடனடியாக வனத்துறையின் அனுமதி பெறப்பட்டு சாலை அமைக்கும் பணி தொடங்கப்படும். எனினும் அல்லேரி மலை கிராம மக்கள் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் இலகுரக வாகனங்களை பயன்படுத்தும் வகையில் ஏற்கனவே உள்ள மண்சாலைகளை மேம்படுத்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் சாலை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது மாவட்ட வன அலுவலர் கலாநிதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, வேலூர் வருவாய் கோட்டாட்சியர் கவிதா, ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் செந்தில் உட்பட பலர் உடன் இருந்தனர்.

The post மலையில் 10 கி.மீ. நடந்து சென்று ஆய்வு செய்த வேலூர் கலெக்டர் சாலை அமைக்க ₹5.51 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல் பாம்பு கடித்து பலியான குழந்தையின் பெற்றோருக்கு ஆறுதல் appeared first on Dinakaran.

Related Stories: