இன்ஸ்டா படுத்தும் பாடு: இனிமே யாராவது ரோட்டில் குளிப்பீங்களா? நடுரோட்டில் ‘சன்பாத்’ வாலிபருக்கு ரூ.3500 பைன்; லைக்சுக்கு வீடியோ போடுறவங்களே உஷார்

ஈரோடு: ரூ.10 சவாலுக்காக நடுரோட்டில் ஸ்கூட்டரில் நின்று குளித்த வாலிபருக்கு போலீசார் ரூ.3500 அபராதம் விதித்தனர். ஈரோடு நகரின் மையப் பகுதியான பன்னீர் செல்வம் பூங்கா சிக்னலில் நேற்று முன்தினம் வாகன ஓட்டிகள் காத்திருந்தனர். அப்போது திடீரென வாலிபர் ஒருவர் ஸ்கூட்டரில் நின்றபடி பக்கெட்டில் இருந்து தண்ணீரை எடுத்து தன் மீது ஊற்றிக் கொண்டு நடுரோட்டில் குளித்தார். அவரது நண்பர் அதை வீடியோ எடுத்தார். இதுபற்றி அந்த வாலிபர் கூறுகையில், இன்ஸ்டாகிராமில் நண்பர் விடுத்த சவாலை ஏற்று ரூ.10க்காக நடுரோட்டில் குளித்ததாக (சன்பாத்) கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. ஈரோடு டவுன் போலீசார் நடத்திய விசாரணையில், அந்த வாலிபர் ஈரோடு அடுத்த வெள்ளோடு பகுதியைச் சேர்ந்த சரவணன் மகன் பாரு (எ) பார்த்திபன் (23) என்பது தெரியவந்தது.

அவர் மீது ஸ்கூட்டரில் ஹெல்மெட் இல்லாமலும், லைசென்ஸ் இல்லாமலும் வந்தது, பொது இடத்தில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்டது என்ற 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து ரூ.3,500 அபராதம் விதித்தனர். சமீபத்தில் தஞ்சை சாலையில் ஸ்கூட்டரில் சென்றபடி குளியல் போட்டவருக்கும், வீடியோ எடுத்தவருக்கும் தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. சமூக வலைதளங்களின் மீதான மோகம் அதிகரித்து உள்ளதால், லைக்ஸ் மற்றும் பாலோவர்சுக்கு ஆசைப்பட்டு ஆபத்தான, சட்ட விரோதமாக மற்றும் முகம் சுளிக்கும் வகையில் வீடியோக்களை பதிவு செய்கின்றனர். அவர்களுக்கு கடிவாளம் போடும் வகையில் போலீசார் இதுபோன்ற நடவடிக்கைகளை தொடர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர்.

The post இன்ஸ்டா படுத்தும் பாடு: இனிமே யாராவது ரோட்டில் குளிப்பீங்களா? நடுரோட்டில் ‘சன்பாத்’ வாலிபருக்கு ரூ.3500 பைன்; லைக்சுக்கு வீடியோ போடுறவங்களே உஷார் appeared first on Dinakaran.

Related Stories: