வேலூர் அருகே மலைக்கிராமத்தில் பாம்பு கடித்து பலியான குழந்தை சடலத்தை 10 கி.மீ. தூக்கி சென்ற பெற்றோர்: பாதை வசதி இல்லாததால் ஆம்புலன்ஸ் பாதி வழியில் நிறுத்தம்

அணைக்கட்டு: அணைக்கட்டு அருகே மலைக்கிராமத்தில் பாம்பு கடித்து பலியான குழந்தை சடலத்தை கையில் தூக்கியபடி 10 கி.மீ. தூரம் பெற்றோர் நடந்தே சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா அல்லேரிமலை பகுதி, அத்திமரத்துகொல்லை மலை கிராமத்தை சேர்ந்தவர் விஜி. கூலி தொழிலாளி. இவரது மனைவி பிரியா. இவர்களது ஒன்றரை வயது பெண் குழந்தை தனுஷ்கா. கடந்த 26ம் தேதி இரவு மூவரும் காற்றுக்காக வீட்டுக்கு வெளியில் படுத்து தூங்கினர். இரவு 10 மணியளவில் குழந்தை தனுஷ்காவை பாம்பு கடித்துள்ளது. அழுகை சத்தம் கேட்டு எழுந்தவர்கள் பாம்பு கடித்ததை அறிந்து குழந்தையை தூக்கிக்கொண்டு பைக்கில் மருத்துவமனைக்கு புறப்பட்டனர்.

சிறிது தூரத்துக்கு மேல் பைக் செல்ல முடியவில்லை. இதனால் குழந்தையை கையில் தூக்கிக்கொண்டு மலையில் இருந்து அடிவாரத்திற்கு வந்தனர். அங்கிருந்து அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு அனுமதித்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வழியிலேயே குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அணைக்கட்டு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் நேற்று முன்தினம் பிரேத பரிசோதனை முடிந்து ஆம்புலன்சில் எடுத்துவரப்பட்ட குழந்தையின் உடல் அல்லேரி மலையடிவாரம் வரை கொண்டுவரப்பட்டது. பின்னர் ஆம்புலன்ஸ் செல்ல பாதை இல்லாததால், அங்கேயே பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு சென்றனர். பின்னர் குழந்தையின் உடலை பெற்றோர் கையில் தூக்கியபடி மலைப்பகுதியில் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் நடந்தே வீட்டிற்கு சென்றனர். இதையடுத்து மாலை குழந்தையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இதுகுறித்து அல்லேரி மலை கிராம மக்கள் கூறுகையில், ‘அல்லேரி மலைக்கு சரியான சாலை வசதி இல்லாததால், உரிய நேரத்தில் சிகிச்சை பெற முடியாமல் பாம்பு கடித்து குழந்தை உயிர் இழந்தது. குழந்தையின் உடலை மீண்டும் மலைக்கு எடுத்துச் செல்வதற்கு போதிய சாலை வசதி இல்லாததால் அவர்களது குடும்பத்தினரே கையில் தூக்கிக்கொண்டு நடந்தே சென்றனர். அல்லேரி மலையில் இருந்து அணைக்கட்டிற்கு 17 கிமீ தூரம் உள்ளது. அடிவாரத்தில் இருந்து மலை கிராமத்துக்கு செல்ல 10 கிமீ தூரம் உள்ளது. இந்நிலையில் சரியான சாலை வசதி இல்லாததால் இந்த அல்லேரி மலைக்கு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் வருவதில்லை. எனவே அல்லேரி மலைக்கு சாலை வசதி செய்துதர வனத்துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

The post வேலூர் அருகே மலைக்கிராமத்தில் பாம்பு கடித்து பலியான குழந்தை சடலத்தை 10 கி.மீ. தூக்கி சென்ற பெற்றோர்: பாதை வசதி இல்லாததால் ஆம்புலன்ஸ் பாதி வழியில் நிறுத்தம் appeared first on Dinakaran.

Related Stories: