வனவிலங்குகளிடமிருந்து பயிர்களை பாதுகாக்க அதிநவீன கருவி

அழுது கொண்டு இருந்தாலும் உழுது கொண்டு இருப்பவர்கள் விவசாயிகள். பல்வேறு இடர்களை எதிர்கொண்டே விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். அதிக மழை, வறட்சி, இயற்கை பேரிடர் என ஒவ்வொன்றும் விவசாயத்தை பாதிக்கும். இவை ஒருபுறம் இருக்க தரமற்ற விதைகள், பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்றவையும் விளை பொருட்கள் உற்பத்திக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மழை பாதிப்பு, வறட்சி மற்றும் இயற்கை பேரிடர் போன்றவை எதிர்பாராமல் நிகழ்வது.

அதே நேரத்தில் வன விலங்குகளால் விளை பயிர்கள் பாதிக்கப்படுவது என்பது அனைத்து காலங்களிலும் நிகழ்கிறது. அடர்ந்த வனப்பகுதி, மலைகளைக்கொண்டுள்ள மாவட்டங்கள் மட்டுமின்றி விழுப்புரம், கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்களிலும் வனவிலங்குகளால் பயிர்கள் சேதமாகி பொருளாதார நஷ்டத்தை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, மயிலம், திண்டிவனம், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை, திருக்கோயிலூர், சங்கராபுரம், சின்னசேலம் போன்ற பகுதிகளில் வனவிலங்குகளால் பயிர் பாதிப்பு ஏற்பட்டுவருவது காலம் காலமாக ஏற்படக்கூடிய பிரச்சனையாக உள்ளது. தேனி, கோவை போன்ற மாவட்டங்களில் யானைகள், காட்டெருமைகள் போன்ற வனவிலங்குகளினால் பாதிப்பு என்றால், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் காட்டுப்பன்றிகள், குரங்குகளால் ஏற்படும் பாதிப்புகள் கணக்கில்லாதவை.

அன்றாடம் பல்வேறு இடங்களில் காட்டுப்பன்றிகள் விளை பயிர்களை நாசம் செய்து வருகின்றன. கரும்பு, வாழை, தென்னை, மணிலா, நெல், உளுந்து போன்ற பயிர் சாகுபடிக்கும் காட்டுப்பன்றிகள் மிகுந்த அச்சுறுத்தலாக உள்ளன. கூட்டம், கூட்டமாக வரும் காட்டுப்பன்றிகளால் விளை பயிர்களும், விளை நிலங்களும் பாழகின்றன. பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நிவாரணமும் கிடைப்பது இல்லை. ‘வன விலங்குகள் பட்டியலில் இருந்து காட்டுப்பன்றியை நீக்க வேண்டும். சுட்டுத்தள்ள அனுமதிக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்துவரும் நிலையில் அரசு பரிசீலனையில் வைத்துள்ளது. விவசாய நிலங்களை வனவிலங்கிடமிருந்து பாதுகாக்க விழுப்புரத்தை சேர்ந்த 13 வயது சிறுவன் அதிநவீன கருவை கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.

விழுப்புரத்தைச் சேர்ந்த விஜயகுமார் – தனலட்சுமி தம்பதியரின் மகன் விஜய்வர்மன் (13). தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். வனவிலங்கிடமிருந்து விவசாய நிலங்களை பாதுகாக்கவும், இதற்காக மின்சார வேலிவைத்து கால்நடைகள் மனித உயிர்கள் இறப்பதை தவிர்க்கவும், மின்னணு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, சென்சார் மூலம் விலங்குகள் நடமாட்டத்தை கண்டறிந்து பட்டாசு சத்தத்தையும், மின்வெளிச்சத்தையும் ஏற்படுத்தி அவகளை விவசாய நிலங்களுக்குள் செல்லாத வகையில் தடுப்புகளை ஏற்படுத்தும் அதிநவீன கருவியை கண்டுபிடித்துள்ளார்.

இதுகுறித்து மாணவன் விஜய்வர்மன் கூறியதாவது: நாட்டின் முதுகெலும்பாக பார்க்கப்படும் விவசாயிகள் கஷ்டப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக வனவிலங்களிடமிருந்து விவசாயத்தை பாதுகாக்க போராடுகிறார்கள். இதற்காக சட்டவிரோதமாக மின்வேலி அமைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு, மனிதர்கள், கால்நடைகள் உயிரிழப்பு என்பது தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்டது. இந்த சம்பவத்திற்காக விவசாயிகளும் கைதுசெய்து தண்டிக்கப்படுகிறார்கள்.

உணவு கொடுக்கும் விவசாயிகள் படும் வேதனையை அறிந்து நீண்டநாட்களாக விவசாய நிலங்களை வனவிலங்கிடமிருந்து பாதுகாக்க வேண்டும். இதற்காக அதிநவீனகருவியை கண்டுபிடிக்க வேண்டுமென்று நினைத்தேன். அதன்படி, சென்சாரில் அதினநவீனகருவியை கண்டுபிடித்துள்ளேன். இந்த கருவியை பொறுத்திவிட்டால் 500 மீட்டர் இடைவெளியில் வனவிலங்குகள் வந்தால் பட்டாசு வெடிப்பது போன்று அதிகசத்தத்தை ஏற்படுத்தும். சென்சார் கருவியில் பட்டாசு ஒலி எழுப்பும் ஜிப் பொருத்தப்பட்டிருக்கும்.

விலங்குகள் வருவதை உணர்ந்து தானியங்கி சென்சார், பட்டாசு ஒலியை 20 நிமிடமாக எழுப்பும். அந்த நோடியே அதிக மின் வெளிச்சத்தை ஏற்படுத்தி விலங்குகள் வராமல் திரும்பி செல்லும் வகையில் கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் விவசாயிகள் பட்டாசு வெடிப்பதும், டார்ச் லைட்அடித்து விரட்டுவதுமாக இருந்தனர். இதனை தானியங்கி முறையில் வடிவமைத்துள்ளேன். ஒரு ஏக்கருக்கு ₹20 ஆயிரம் செலவாகும். இவ்வாறு அவர் கூறினார்.

இப்பகுதியில் இடம்பெறும் கண்டுபிடிப்புகளுக்கு வாரம் ₹5 ஆயிரம் பரிசு வழங்கப்படுகிறது. இதுபோல் மாணவர்களின் கண்டுபிடிப்புகள் குறித்த தகவல் இருந்தால் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.
மாணவர் கண்டுபிடிப்பு சண்டே ஸ்பெஷல் தினகரன், 229, கச்சேரி சாலை, மயிலாப்பூர், சென்னை-600 004. email: studentinvention@dinakaran.com

காப்புரிமை கேட்டு மனு

மாணவன் விஜய்வர்மன், புதிதாக கண்டுபிடித்து உள்ள சென்சார் கருவிக்கு காப்புரிமை கேட்டு விண்ணப்பித்துள்ளார். இதனிடையே, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாணவன் விஜய்வர்மனை நேரில் பாராட்டி அவரது கண்டுபிடிப்பை ஊக்குவித்தார்.

 

The post வனவிலங்குகளிடமிருந்து பயிர்களை பாதுகாக்க அதிநவீன கருவி appeared first on Dinakaran.

Related Stories: