அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர் மாறும்போது மாற்றக்கட்டணம் வசூலிப்பதை ஏற்க முடியாது: சங்க பதிவாளரின் உத்தரவை உறுதி செய்து ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர்கள் மாறும்போது, அதற்கான மாற்றக்கட்டணம் வசூலிக்கும் குடியிருப்பு சங்க விதியை ரத்து செய்த மாவட்ட பதிவாளரின் உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது. சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அங்கூர் கிராண்ட் குடியிருப்பு உரிமையாளர்கள் சங்கம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கில், அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் கட்டியபோது 60 வீடுகளின் பராமரிப்பு செலவிற்காக சதுர அடிக்கு 25 ரூபாய் வீதம் தொகுப்பு நிதியாக 2009ம் ஆண்டு வசூலிக்கப்பட்டது. பின்னர் 2010ம் ஆண்டில் அந்த தொகை 50 ரூபாயாக உயர்த்தப்பட்டது.

குடியிருப்பை வேறு நபர்களுக்கு விற்கும்போது மாற்றக் கட்டணம் (டிரான்ஸ்பர்) வசூலிக்கப்படும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. அதன்படி இந்துபாலா என்பவரின் ஒரு வீட்டை வாங்கிய ஆஷிஷ் தவே என்பவர் மாற்ற கட்டணத்தை செலுத்த மறுத்ததுடன் பதிவுத்துறை மற்றும் சங்கங்களின் பதிவாளரிடம் புகார் அளித்தார். புகாரின் மீது விசாரணை நடத்திய மாவட்ட பதிவாளர் மாற்றக் கட்டணம் வசூலிக்கும் சங்கத்தின் துணை விதியை செல்லாது என்று அறிவித்தார். இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பராமரிப்பு செலவிற்காக தொகுப்பு நிதி வசூலிப்பது தேவையில்லாத சிக்கலை உருவாக்கும். ஒவ்வொரு முறையும் குடியிருப்பை வாங்குபவரிடம் மாற்றக் கட்டணம் வசூலிப்பது தவறு. அப்படி வசூலித்தால் அந்த தொகை பல மடங்கு ஆகிவிடும் என்பதால் அதை அனுமதிக்க முடியாது. அரசு சட்டத்தின் படி மாவட்ட பதிவாளர் பிறப்பித்த உத்தரவில் தவறில்லை. இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. சமூகமாக கூடி வாழும்போது பரஸ்பரம், புரிதல் ஆகியவை முக்கியமானது என்று உத்தரவில் கூறியுள்ளார்.

The post அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர் மாறும்போது மாற்றக்கட்டணம் வசூலிப்பதை ஏற்க முடியாது: சங்க பதிவாளரின் உத்தரவை உறுதி செய்து ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: