நாமக்கல், மே 24: நாமக்கல்லில், 486 தனியார் பள்ளி வாகனங்களை கலெக்டர் முன்னிலையில் ஆர்டிஓக்கள் ஆய்வு செய்தனர். இதில், 28 பஸ்களில் பல்வேறு குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டது. தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின்பு வரும் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதையொட்டி, தனியார் பள்ளி வாகனங்கள் நல்லமுறையில் உள்ளதாக என ஆய்வு செய்யப்பட்டது. நாமக்கல் வடக்கு மற்றும் நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட தனியார் பள்ளி வாகனங்கள் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் கலெக்டர் டாக்டர் உமா நேற்று ஆய்வு செய்தார். தொடர்ந்து, வருவாய்த்துறை, பள்ளிக் கல்வித்துறை, காவல்துறை, போக்குவரத்து துறை ஆகிய துறைகளின் அலுவலர்களால் பள்ளி வாகனங்களுக்கான சிறப்பு விதியின் படி வாகனங்கள் இயங்குகிறதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வில் நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குட்பட்ட 27 பள்ளிகளை சேர்ந்த 269 வாகனங்கள், நாமக்கல் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட 23 பள்ளிகளை சேர்ந்த 217 வாகனங்கள் என மொத்தம் 486 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. இதில், 458 பள்ளி வாகனங்கள் தகுதியான நிலையில் உள்ளது என கண்டறியப்பட்டது. மீதமுள்ள 28 வாகனங்கள் குறைகளை நிவர்த்தி செய்து ஆய்வுக்கு கொண்டுவரவேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, வாகனங்களின் பாதுகாப்பு மற்றும் கட்டமைப்பு, தகுதி வாய்ந்த ஓட்டுனர், நடத்துனர், மாணவ-மாணவிகள் ஏறும், இறங்கும் வழிகளில் உறுதியான கதவுகள், படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளதா என்றும், பள்ளி வாகனங்களில் மஞ்சள் நிறம், உரிய மருந்துகளுடன் கூடிய முதலுதவிப் பெட்டி, வேக கட்டுப்பாட்டு கருவி, அவசரகால வழி, மாணவர்களின் புத்தகப்பையை வைக்க வசதி மற்றும் தீயணைப்பு கருவி உள்ளதா என கலெக்டர் ஆய்வு செய்தார். மேலும், பள்ளி வாகன சிறப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா என்றும், தகுதிச்சான்று, அனுமதி சீட்டு, காப்புச்சான்று, புகைச்சான்று, வரி மற்றும் பசுமை வரி ஆகியவை நடப்பில் உள்ளதா எனவும் கலெக்டர் ஆவணத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, பள்ளி வாகன டிரைவர்கள் மற்றும் வாகன பொறுப்பாளர்களுக்கு தீயணைப்பு துறை வீரர்கள் வாகனத்தில் உள்ள தீயணைப்பு கருவியை அவசர காலத்தில் எவ்வாறு கையாள்வது என செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர். அதனைத்தொடர்ந்து 581 பள்ளி வாகன டிரைவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் கண் பரிசோதனைகள் மருத்துவ குழுவினரால் செய்யப்பட்டது. ஆய்வின் போது அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, வருவாய் கோட்டாட்சியர் சுகந்தி, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் முருகேசன், முருகன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சக்திவேல், உமாமகேஸ்வரி உட்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post 486 தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு 28 பஸ்களில் குறைபாடுகள் கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.