வன விலங்குகளால் பாதிக்கப்பட்ட 6142 பேருக்கு ₹7.16 கோடி இழப்பீடு

கிருஷ்ணகிரி, மே 18: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், வன விலங்குகளால் பாதிக்கப்பட்ட 6142 பேருக்கு ₹7.16 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய இரு மாநில எல்லையில், கிருஷ்ணகிரி மாவட்டம் உள்ளது. இம்மாவட்டத்தில், மொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு வனப்பகுதியாக உள்ளது. இதில் யானைகள், சிறுத்தைகள், கரடிகள், மான்கள், காட்டுப்பன்றிகள், காட்டு எருதுகள் போன்ற ஏராளமான விலங்குகள் உள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை கொண்டுள்ள தளி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, ஓசூர், ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி போன்ற வனச்சரகங்களில் உள்ள காடுகளில், ஏராளமான யானைகள் உள்ளது. இவை தவிர, ஆண்டுதோறும் கர்நாடக வனப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து வரும் யானைகள், அக்டோபர் முதல் 6 மாத காலம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு வனப்பகுதிகளில் பிரிந்து முகாமிட்டு, அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று பயிர்களை நாசப்படுத்துகின்றன. சில நேரங்களில் மனிதர்களை தாக்குவதும், அதனால் மனித உயிரிழப்பு ஏற்படுவதும் தொடர் கதையாக உள்ளது.

வனப்பகுதியில் போதுமான தீவனம், தண்ணீர் கிடைக்காததால், அங்கிருந்து வெளியேறும் வனவிலங்குகள், வனத்தையொட்டி உள்ள கிராமங்களில் புகுந்து, பயிர்களை சேதப்படுத்துகின்றன. விவசாயிகள் சிலர் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த, தோட்டத்தில் இரவு நேரங்களில் சட்டவிரோதமாக மின்வேலி அமைக்கின்றனர். இதுபோன்ற மின்வேலியில் சிக்கி, யானைகள் உயிரிழப்பதும் வாடிக்கையாக உள்ளது. அதே சமயம், யானைகள் மற்றும் காட்டுப்பன்றிகள் போன்றவற்றால் ஏற்படும் பயிர் மற்றும் மனித உயிர் இழப்புகளுக்கு வனத்துறை சார்பில் இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் முதல் கடந்த மார்ச் 31ம் தேதி வரையிலான 5 ஆண்டுகளில், யானைகளால் உயிரிழந்த 44 விவசாயிகளின் குடும்பத்தினருக்கு, ₹1 கோடியே 90 லட்சமும், காயம் அடைந்த 35 விவசாயிகளுக்கு ₹9.76 லட்சம், பயிர் சேதத்தால் பாதிக்கப்பட்ட 6032 விவசாயிகளுக்கு ₹5.12 கோடி, வன விலங்குகளால் கால்நடைகள் இறந்ததற்கு இழப்பீடாக 11 பேருக்கு ₹2.35 லட்சம், உடமைகளை இழந்த 20 பேருக்கு ₹14.47 லட்சம் என மொத்தம் 6142 பேருக்குஇ வனத்துறை மூலம் இழப்பீடாக ₹7 கோடியே 16 லட்சத்து 14,600 வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து வனத்துறை அலுவலர்கள் கூறுகையில், ‘வனவிலங்களால் விளைநிலங்களில் ஏற்பட்ட பயிர்சேதம், மனித உயிரிழப்பு, உடமைகள் ேசதம், கால்நடைகள் சேதம் போன்றவற்றுக்காக, கடந்த 5 ஆண்டுகளில் 6142 பேருக்கு ₹7 கோடியே 16 லட்சத்து 14 ஆயிரத்து 600 இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகளால் சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு, ஒரே மாதத்தில் இழப்பீடு தொகை விவசாயிகளிடம் வழங்கப்படுகிறது,’ என்றனர்.

The post வன விலங்குகளால் பாதிக்கப்பட்ட 6142 பேருக்கு ₹7.16 கோடி இழப்பீடு appeared first on Dinakaran.

Related Stories: