குற்றாலம் சாரல் திருவிழாவில் சுற்றுலா பயணிகளுக்கு படகு போட்டி

தென்காசி, ஜூலை 31 : குற்றாலத்தில் சாரல் திருவிழாவின் மூன்றாவது நாளான நேற்று சுற்றுலா பயணிகளுக்கான படகு போட்டி நடந்தது. குற்றாலம் சீசனை கொண்டாடும் வகையில் ஆண்டு தோறும் சாரல் திருவிழா நடத்தப்படுகிறது. இதில் சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக பல்வேறு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு சாரல் திருவிழா கடந்த 28ம் தேதி துவங்கியது. விழாவையொட்டி நேற்று முன்தினம் ஐந்தருவி சுற்றுச்சூழல் பூங்காவில் தோட்டக்கலைத்துறை சார்பில் மலர், காய்கறி கண்காட்சி  துவங்கியது. 3வது நாளான நேற்று ஐந்தருவி சுற்றுலாத்துறை படகு குழாமில் படகுப்போட்டி நடத்தப்பட்டது.

போட்டியை மாவட்ட சுற்றுலா அலுவலர் நெல்சன், குற்றாலம் சுற்றுலாத்துறை தமிழ்நாடு ஓட்டல் மேலாளர் அசோகன் ஆகியோர் துவக்கி வைத்தனர். நீச்சல் பயிற்சியாளர் கர்ணன் போட்டியை நடத்தினார். இதில் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். முதல் பரிசை ஐந்தருவி வெண்ணமடை பகுதியைச் சேர்ந்த செந்தில் மற்றும் அருண்குமார் குழுவினரும், 2வது இடத்தை குற்றாலத்தைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் ஸ்ரீதரன் குழுவினரும், 3வது இடத்தை ராஜபாளையத்தைச் சேர்ந்த முனீஸ்வரன் மற்றும் கருப்பசாமி குழுவினரும் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு இரவில் நடந்த சாரல் திருவிழாவில் பரிசுகள் வழங்கப்பட்டன.

Related Stories: