×

தெப்பக்காடு முகாமில் யானை சவாரி செய்து சுற்றுலா பயணிகள் உற்சாகம்

கூடலூர் : நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதிகளில் வனத்துறை சார்பில் 25 யானை வளர்க்கப்பட்டு வருகின்றன. இவை தெப்பக்காடு,பாம்பக்ஸ்,ஈட்டி மரம் ஆகிய 3 முகாம்களில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் தெப்பக்காட்டில் உள்ள வளர்ப்புயானைகள் சவாரிக்கு பயன்படுத்தப்படுகின்றன. நாளொன்றுக்கு 3 யானைகள் வரை காலை 7 மணி முதல் 8 மணி வரையிலும் மாலை 4 மணிமுதல் 5 மணி வரையிலும் சவாரிக்காக பயன்படுத்தபடுகின்றன.

யானை சவாரிக்காக பெரியவர்கள் 4 பேருக்கு ரூ.850 வசூலிக்கப்பட்டு வந்த வேளையில்,பிப்ரவரி மாதம் முதல் உள்நாட்டுசுற்றுலா பயணிகளிடம்  ரூ.1,140ம், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் ரூ. 3ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. இதே போல சவாரி நேரமானது 30 நிமிடத்தில் இருந்து 45 நிமிடமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதே போல நபர் ஒருவருக்கு வனப்பகுதியில் வனத்துறை வாகனத்தில் சென்று சுற்றிப்பார்க்க ரூ.135 வசூலிக்கப்பட்டு வந்தது.பிப்ரவரி மாதம் முதல் நபர் ஒருவருக்கு ரூ.340 வசூலிக்கப்படுவதோடு வனப்பகுதியில் ஒரு மணி நேரம் வனத்துறை வாகனத்தில் சென்று வனவிலங்குகளை கண்டு ரசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது கோடை சீசன் துவங்கி உள்ள நிலையில் தெப்பக்காடு முகாமிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. காலநிலைக்கேற்ப யானை சவாரி நிறுத்தப்படுவதும் உண்டு, மழை பெய்தால் யானை சவாரி ரத்து செய்யப்பட்டு விடும். கடந்த 2 நாட்களில் தெப்பக்காடு முகாமிற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை புரிந்தனர். இவர்கள் யானை சவாரி செய்தும், வாகனம் மூலம் வனத்திற்குள் சுற்றுலா சென்றும், வளர்ப்பு யானைகளுக்கான உணவு ஊட்டும் நிகழ்ச்சியை கண்டு களித்தும் மகிழ்ந்தனர்.

Tags :
× RELATED மரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் மலர்கள்!