காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு அருவியில் குளித்து பயணிகள் உற்சாகம்

பென்னாகரம்:  காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து, மெயினருவியில் கொட்டும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு, தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து திரளான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். கடந்த சில வாரங்களாக, ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 200 கனஅடிக்கும் குறைவாக வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டிய அருவிகள் வறண்டு, வெறும் பாறைகளாக தென்படுகிறது. மெயினருவியிலும் சொற்ப அளவுக்கே தண்ணீர் கொட்டியது. இதனால், சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது. தற்போது பள்ளிகளில் பொதுத்தேர்வுகள் நடப்பதால், விடுமுறை நாட்களில் கூட, சுற்றுலா பயணிகள் வருகை வழக்கத்தை காட்டிலும் வெகுவாக சரிந்துள்ளது.

Advertising
Advertising

இந்நிலையில், கடந்த 2 நாட்களாக தேன்கனிக்கோட்டை, நாட்றாம்பாளையம், அஞ்செட்டி, தளி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 500 கனஅடியாக அதிகரித்து, வறண்டு கிடந்த மெயினருவியில் தண்ணீர் கொட்டுகிறது. நேற்று விடுமுறை தினத்தையொட்டி ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகள், மெயினருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். முன்னதாக தொங்குபாலம், முதலை பண்ணை, வண்ண மீன் காட்சியகம் ஆகியவற்றை பார்வையிட்டு மகிழ்ந்தனர். அதேபோல், ஊட்டமலை பரிசல் துறையில் திரளானோர், குடும்பத்தினருடன் உற்சாகமாக பரிசல் சவாரி செய்து, காவிரியின் அழகை கண்டு ரசித்தனர்.

Related Stories: