சுற்றுலா பயணிகள் வராமல் களையிழந்த ஒகேனக்கல்

பென்னாகரம்:  பிளஸ் 2 தேர்வுகள் நடைபெற்று வருவதால், விடுமுறை நாளான நேற்று சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக குறைந்தது. இதனால், ஒகேனக்கல் களையிழந்து காணப்பட்டது. தமிழகத்தில் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக திகழும் ஒகேனக்கல்லுக்கு, தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால், தண்ணீர் ஆர்ப்பரித்து வந்த அருவிகள், பாறைகளாக காணப்படுகிறது. இதனிடையே, கடந்த 1ம் தேதியில் இருந்து பிளஸ் 2 தேர்வுகள் நடந்து வருகிறது. இதனையடுத்து, சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக குறைந்துள்ளது.

 நேற்று விடுமுறை நாள் என்ற போதிலும், சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் குறைவாக இருந்தது. இதனால், முதலை பண்ணை, பரிசல் துறை உள்ளிட்ட இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இது குறித்து பரிசல் ஓட்டிகள் கூறுகையில், ‘கடந்த சில நாட்களாக ஒகேனக்கல்லுக்கு 550 கன அடிவீதம் தண்ணீர் வந்து கொண்டுள்ளது. நீர்வரத்து குறைவால் சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக குறைந்துள்ளது. நேற்று விடுமுறை நாளில் வழக்கமான கூட்டத்தை விட குறைவாகவே வந்திருந்தனர். இதனால் விடுதிகள், ஓட்டல்கள் மற்றும் அனைத்து உணவகங்களில் விற்பனை மந்தமாக இருந்தது. பொதுத்தேர்வுகள் முடிந்த பின்னரே சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும்,’ என்றனர்.

Related Stories: