×

ராஜபாளையம் ஜிஹெச் முன்பு ஓடையில் தேங்கியுள்ள கழிவுநீரால் நோய் அபாயம்

ராஜபாளையம்: ராஜபாளையம் நகரின் மைய பகுதியில் செயல்படும் அரசு மகப்பேறு மருத்துவமனை முன்பு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த மருத்துவமனை முன்பு சாலையின் குறுக்கே கழிவுநீர் ஓடை செல்கிறது. இந்த ஓடையில் கழிவுநீர் கடந்து செல்ல முடியாமல் தேங்கியிருப்பதால் அப்பகுதியில் நோய் தொற்று ஏற்படும் அபாய நிலை உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் கூறியும் தேசிய நெடுஞ்சாலை இருபுறமும் வாறுகால் வசதி ஏதும் இல்லாமல் இருந்து வருவதால் பல ஆண்டுகளாக மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்கிய வண்ணம் உள்ளது.

தற்போது பழைய பேருந்து நிலையம் பணிகள் நடைபெற்று வருவதால் இப்பகுதியில் பேருந்துகள் அனைத்தும் நின்று செல்லக்கூடிய அளவிற்கு நிழற்குடை அமைத்து செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில் செயல்படும் அரசு மகப்பேறு மருத்துவமனை மற்றும் பேருந்துக்கு செல்லக்கூடிய பயணிகள் நின்று செல்லும் பகுதியாக செயல்படுவதால் நோய் தொற்று ஏதும் ஏற்படாத வண்ணம் நகராட்சி நிர்வாகம் பலமுறை இப்பகுதியை தூர்வாரியும் கழிவுகளை அகற்ற முடியாமல் திணறி வருகின்றனர். ஆகவே உடனடியாக தேசிய நெடுஞ்சாலை துறையினர் வாறுகால் வசதி ஏற்படுத்திக் கொடுத்து மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்காமல் இருக்க வேண்டும் என நகர் பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Tags : Rajapalayam GH ,
× RELATED ராஜபாளையம் ஜிஹெச் முன்பு ஓடையில் தேங்கியுள்ள கழிவுநீரால் நோய் அபாயம்