×

கொளுத்துதா.. வெயில்... உடம்பு ஜில்லுனு இருக்க இதை சாப்பிடுங்க

சிவகாசி, மார்ச் 20: கோடை காலம் துவங்கும் முன்பே சுட்டெரிக்கும் வெயில் அதிகரிக்க தொடங்கி விட்டது. வெயிலை தாக்கு பிடிக்க நமது உடலில் போதிய நீர்சத்து மற்றும் ஆற்றல் தேவைப்படுகிறது. எனவே தர்பூசணி, இளநீர் போன்ற இயற்கை உணவுகள் கோடை காலத்தில் குளிர்ச்சியை தருவதோடு உடம்பிற்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது. அதே நேரத்தில் டப்பாக்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் மற்றும் ஜூஸ்கள் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவைகளில் அதிக அளவு சர்க்கரை சேர்க்கப்படுகிறது. எனவே இவற்றை தவிர்த்து வீட்டிலேயே பழங்களை கொண்டு ஜூஸ்கள் தயாரித்து குடிக்க வேண்டும். உடம்பிற்கு குளிர்ச்சி தரக்கூடியதும், குளு, குளுவென ஆக்கக்கூடிய உணவு வகைகள் இதோ...

தயிர்: கோடை காலத்தில் மக்கள் உணவில் அதிகளவில் தயிரை சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இது உடம்பிற்கு நல்ல் குளிர்ச்சியை தரும். இதில் புரதங்கள் அதிகளில் உள்ளன. இவை தசை வளர்ச்சி மற்றும் பாதிக்கப்பட்ட தடைகளை சரி செய்கிறது. தயிர் ஒரு புரோபயாடிக் உணவு என்பதால் குடல் வாழ் பாக்டீரியாக்களை அதிகரித்து செரிமானத்திற்கு உதவுகிறது.

இளநீர்: இளநீர் ஒரு இயற்கையாகவே ஆற்றலை தரும் பானமாகும். கோடை கால வெயிலில் இருந்து தப்பிக்க ஆங்காங்கே இருக்கும் இளநீர்களை வாங்கி அருந்துவது மிகவும் அவசியமாகும். இதிலுள்ள இயற்கை சர்க்கரை, சோடியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவை உடம்பிற்கு ஆற்றலையும், குளிர்ச்சியையும் தருகிறது. உடம்பில் சீரண சக்தியை மேம்படுத்துகிறது. இதிலுள்ள சைட்டோகின் மற்றும் லாரிக் அமிலம் வெயிலால் ஏற்படும் சரும பாதிப்பை தடுக்கிறது.

தர்பூசணி: கொளுத்தும் வெயிலிற்கு ஏற்ற உணவு என்றாலே முதலில் நினைவுக்கு வருவது தர்பூசணி மட்டும் தான். இதிலுள்ள அதிகப்படியான தண்ணீர் சத்து கோடை கால தாக்கத்தை போக்குகிறது. அதிகமாக வியர்க்கும் போது நமது உடலில் உப்புச்சத்து குறைபாடு ஏற்படலாம். இதனால் ஏற்படும் சோடியம் மற்றும் பொட்டாசியம் எலக்ட்ரோலைட் சமநிலையின்மையை சரி ஆக்குகிறது. இதில் சர்க்கரை சத்து அதிகமாக இருந்தால் கூட குறை கிளைசெமிக் குறியீடு இருப்பதால் எல்லோரும் தர்பூசணியை தாராளமாக சாப்பிடலாம். இதிலுள்ள எல்- சிட்ரூலைன் என்ற அமினோ அமிலம் உடற்பயிற்சியில் ஏற்படும் தசைகளின் வலியை குறைக்கிறது. உடல் வெப்பத்தை குறைத்து ஆற்றலை தர சிறந்த பழவகைகளில் இதுவும் ஒன்று.

வெள்ளரிக்காய்: வெள்ளரிக்காயில் கோடை தணிக்கும் நீர்ச்சத்து, நார்ச்சத்துக்கள், வைட்டமின் பி போன்றவை காணப்படுகிறது. எனவே மன அழுத்தம் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இதில் ஆன்டி ஆக்ஸிடன்கள் இருப்பதால் வயிறு சூட்டை தணித்து அசிட்டிட்டி பிரச்சனையை குறைக்கிறது.

வெங்காயம், சப்ஜா விதைகள் : வெங்காயத்தில் இயற்கையாகவே உடம்பை குளிர்ச்சியாக்கும் பொருட்கள் உள்ளன. எனவே வெங்காயத்தை உணவில் சேர்ப்பது வெயிலுக்கு எதிரான பாதுகாப்பை தருகிறது. அதேபோல் சப்ஜா விதைகள் உடம்பிற்கு குளிர்ச்சியை தரக்கூடியது. இதில் நார்சத்து, அமினோ அமிலங்கள், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இருப்பது பசியை கட்டுப்படுத்தவும், உடல் மெட்டா பாலிசத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.

Tags :
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...