×

திருவாடானை அருகே எல்லை பிரச்னையால் சாலை சீரமைப்பதில் சிக்கல்

திருவாடானை, மார்ச் 20: திருவாடானை அருகே பாரதிநகர் பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் மயானத்திற்கு செல்லும் சாலை திருவாடானை அரசு கலைக்கல்லூரி வளாக சுற்றுச்சுவரை ஒட்டி 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த மயானத்திற்கு செல்லும் சாலை கடந்த பல ஆண்டுகளாக கல்லூர் ஊராட்சியின் கட்டுப்பாட்டில் இருந்து பராமரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மயானத்திற்கு செல்லும் சாலை வருவாய்த்துறை கிராம கணக்கில் திருவாடானை ஊராட்சி எல்லைக்குள் வருவதாகக் கூறி இந்த மயானச் சாலையை திருவாடானை ஊராட்சி நிர்வாகம் கையகப்படுத்தி ஒரு லட்சம் மதிப்பீட்டில் மெட்டல் சாலையும் அமைத்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் கல்லூர் ஊராட்சிக்குட்பட்ட பாரதிநகர் பகுதியில் வசிக்கும் அனைத்து சமுதாய மக்களின் சமத்துவ மயானமாக தற்சமயம் வரை இந்த இடம் இருந்து வருகிறது. இந்த நிலையில் மயானச் சாலையை சீரமைத்து தர இந்த இரண்டு ஊராட்சி நிர்வாகமும் எல்லைப் பிரச்னையால் அந்த பணியை கிடப்பில் போட்டுள்ளது. இதனால் மயானத்திற்கு செல்லும் 2 கிலோ மீட்டர் தூரமுள்ள சாலை நீண்ட காலமாக ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. இந்நிலையில் இங்குள்ள 2 ஊராட்சி நிர்வாகமும் எல்லைப் பிரச்னையால் இந்த மயானச் சாலையை சீரமைக்காமல் கிடப்பில் போட்டுள்ளது. ஆகையால் மயானச் சாலையை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்து தார்சாலையாக அமைத்துத்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Thiruvadan ,
× RELATED விஷ வண்டுகள் அழிப்பு