×

தாயில்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு108 ஆம்புலன்ஸ் சேவை வசதி செய்து தர வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

ஏழாயிரம்பண்ணை, மார்ச் 19: தாயில்பட்டி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கர்ப்பிணிகள் உள்ளிட்ட சிகிச்சைக்கு வருபவர்களை அழைத்து வர 108 ஆம்புலன்ஸ் சேவை வசதி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை ஒன்றியத்திற்குட்பட்ட தாயில்பட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இருந்தது. அதன்பின் இது, மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்தப்பட்டது. இதையடுத்து தாயில்பட்டி, வெற்றிலையூரணி, சுப்ரமணியபுரம், சல்வார் பட்டி, மீனாட்சிபுரம், வெம்பக்கோட்டை, கணஞ்சாம்பட்டி உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த கிராமமக்கள் தினமும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். அதிலும் குறிப்பாக கர்ப்பிணிகள், தாய்மார்கள் என அதிகம் வந்து செல்கின்றனர். ஆனால் அவர்களை அழைத்து சென்று வர ஆம்புலன்ஸ் வசதி இல்லை.

இதனால் சிகிச்சைக்கு வருபவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். நடுத்தர வர்க்கத்தினர் வாடகை வாகனங்களில் கட்டணம் கொடுத்து வந்து செல்கின்றனர். ஆனால் ஏழை, எளியோர் வாடகை வாகனங்களில் வர வசதியின்றி தவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாயில்பட்டி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 108 சேவை ஆம்புலன்சை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வெம்பக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாலை விபத்து ஏற்பட்டால் 108 ஆம்புலன்ஸ் சாத்தூர் அல்லது சிவகாசியில் இருந்து வர தாமதம் ஆகிறது. எனவே வெம்பக்கோட்டை ஒன்றியத்திற்கு என 108 ஆம்புலன்ஸ் சேவை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Thailpatti Primary Health Centre ,
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...