×

ராமநாதபுரம் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உடனடியாக நிவாரணம்: அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்

ராமநாதபுரம், மார்ச் 19:  ராமநாதபுரம் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்து, நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார். ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சமூக நலத்துறை சார்பில் திருமண உதவித்தொகை மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். எம்எல்ஏக்கள் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், முருகேசன் மற்றும் கருமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் ரூ.1 கோடியே 34 லட்சத்துக்கு தாலிக்கு தங்கமும், ரூ.1 கோடியே 40 லட்சம் மதிப்பில் திருமண உதவித்தொகை என 300 பயனாளிகளுக்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளாகியும் ராமநாதபுரத்தில் குடிநீர் பிரச்னை இருந்து வருகிறது. கடந்த 2010ல் திமுக ஆட்சியில் ரூ.616 கோடியில் காவிரி  கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால் அதனை அதிமுக ஆட்சியில் முறையாக பராமரிக்கவில்லை. இதனால் தற்போது கரூர் பகுதியிலிருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ரூ.2,833 கோடியில் தண்ணீர் வழங்கும் புதிய திட்டத்திற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்திர உதவித்தொகை ரூ.1000 வழங்கும் திட்டத்தை விரைவில் முதலமைச்சர் துவக்கி வைக்க உள்ளார். டவுன் பஸ்களில் கட்டணமில்லா பயணம் உள்ளிட்ட பெண்கள் நலன் சார்ந்த திட்டங்களால் திமுகவிற்கு பெண்களின் ஆதரவு பெருகி வருகிறது. இதற்கு சாட்சியாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 90 சதவீத பெண்கள் திமுக கூட்டணி கட்சி வேட்பாளருக்கு வாக்களித்தனர்.மேலும் இந்தாண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் பருவமழை குறைந்து நெல், மிளகாய் உள்ளிட்ட விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது, எனவே நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து முதலமைச்சரிடம் பேசி, நிவாரணத் தொகையை உடனடியாக பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும்.
ராமநாதபுரம் மாவட்ட விவசாய சாகுபடிக்காக தண்ணீரை தேக்கி வைப்பதற்காக அனைத்து நீர் வரத்து கால்வாய், ஆறுகளை மராமத்து செய்து, தேவையான இடங்களில் தடுப்பணை கட்டப்படும். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து ராமநாதபுரம் தனியார் கல்லூரியில் நடந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை துவக்கி வைத்து, இதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் பணி நியமன ஆணைகளை வழங்கினார். பிறகு கடலாடி யூனியன் ஏர்வாடி, சவேரியார்பட்டிணம் ஆகியவற்றில் புதிய டிரான்ஸ்பார்மர்கள் செயல்பாட்டினை துவக்கி வைத்தார்.

Tags : Ramanathapuram ,Minister ,Rajakannappan ,
× RELATED ஓ.பன்னீர்செல்வம் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை