×

வேளாண் வளர்ச்சி திட்டத்தில் 11 கிராம பஞ்சாயத்துகள் தேர்வு

திருவாடானை: திருவாடானை வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 11 கிராம பஞ்சாயத்துக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழக அரசு வேளாண்மையை விரிவாக்கம் செய்யும் வகையில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் கடந்த ஆண்டு திருவாடானை ஒன்றியத்தில் 2022-2023ம் ஆண்டு நெய்வயல், கூகுடி, தேலூர், வெள்ளையபுரம், பதனக்குடி, புதுப்பட்டினம், முள்ளி முனை, காரங்காடு, எஸ்பி பட்டினம், நகரிக்கத்தான், நம்புதாளை ஆகிய 11 கிராம பஞ்சாயத்துக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இவற்றில் நெய்வயல் கிராமத்தில் தரிசுநில தொகுப்புகள் உருவாக்கப்பட்டு ஆழ்துளை கிணறு தோண்ட இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கலைஞர் திட்டத்தின் கீழ் தென்னங்கன்றுகள் முழு மானியத்திலும், உயிர் உரம் கைத்தெளிப்பான் ஆகியவைகள் 50% மானியத்திலும், மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 2022- 2023 பண்ணை கருவிகள், ஜிப்சம் ஜிங் சல்பேட் தார்பாய் 50 சதவீத மானியத்திலும், மரக்கன்றுகள் முழு மானியத்திலும் வழங்கப்படுகின்றன. அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் கடந்த வருடம் 2021- 2022ம் ஆண்டு திருவாடானை வட்டாரத்தில் 8 கிராம பஞ்சாயத்துகள் தேர்வு செய்யப்பட்டன.

கல்லூர் அஞ்சுகோட்டை தளிர் மருங்கூர் வட்டாணம்,முகில் தகம், கொடிப் பங்கு, சிறுகம்பையூர், புள்ள கடம்பன் ஆகிய கிராம பஞ்சாயத்துகள் தேர்வு செய்யப்பட்டன. இவற்றில் தளிர் மருங்கூர் பஞ்சாயத்தில் தரிசி நில தொகுப்புகள் உருவாக்கப்பட்டு ரூ.10 லட்சம் செலவில் ஆழ்துளை கிணறும் மற்றும் மின்சார வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. மேலும் 2021-2022ம் ஆண்டு 8 பஞ்சாயத்திற்கும் கலைஞர் திட்டத்தின் கீழ் கைத்தெளிப்பான், பண்ணை கருவிகள், தார்பாய் 50% மானியத்தில் வழங்கப்படுகின்றன. இத்தகவலை திருவாடானை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED பேனர் வைக்க முயன்றவர் மின்சாரம் தாக்கி சாவு