×

ஓடும் பேருந்தில் சிறுமியிடம் சில்மிஷம் செய்த முதியவருக்கு 5 ஆண்டு சிறை

விழுப்புரம், அக். 1: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ஓடும் பேருந்தில் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட முதியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமி கடந்த ஜனவரி மாதம் 18ம் தேதி தனது தாயுடன் திருநாவலூரில் இருந்து பண்ருட்டிக்கு தனியார் பேருந்தில் சென்றுள்ளார். அப்போது பேருந்தில் கூட்ட நெரிசலாக காணப்பட்டது. இதனால் சிறுமியை சீட்டில் அமர்ந்திருந்த முதியவர் அருகில் அமர வைத்திருந்தார். அப்போது அந்த முதியவர் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனால் அழுது கொண்டு தனது தாயிடம் வந்த சிறுமி, நடந்தவற்றை தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தாய் மற்றும் சக பயணிகள் அந்த முதியவருக்கு தர்மஅடி கொடுத்து உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், அந்த முதியவர் தேவியானந்தல் கிராமத்தைச் சேர்ந்த பரசுராமன்(58) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் போக்சோ சிறப்பு  நீதிமன்றத்தில் நடந்துவந்தது. சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி சாந்தி நேற்று தீர்ப்பு கூறினார். அதில் குற்றம் சாட்டப்பட்ட பரசுராமனுக்கு, 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக ரூ.4 லட்சம் வழங்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட பரசுராமன் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது