×

திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் 36,000 ஏக்கரில் சம்பா தாளடி சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரம்: குறுவை சாகுபடி அதிகரிப்பு

திருத்துறைப்பூண்டி,அக்.1: காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விவசாயிகள் குறுவை சாகுபடி செய்ய மேட்டூர் அணையிலிருந்து தமிழக வரலாற்றில் முதல் முறையாக மே மாதமே தண்ணீர் திறக்கப்பட்டது. மேட்டூர் அணை முன்கூட்டிய திறக்கப்பட்டதால் நிலத்தடி நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்துள்ளது. நிலத்தடி நீர்மட்டம் உயர்வதால் நெல் மட்டுமல்லாமல் கோடை பயிரான பயறு மற்றும் தானிய வகைகள் அதிக அளவில் சாகுபடி செய்ய வாய்ப்புள்ளது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் தொடர்ந்து நான்காவது வருடமாக குறுவை சாகுபடி பரப்பு அதிகரித்து வருகிறது. 2019ம் ஆண்டு 50 ஏக்கரில் மட்டும் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. 2020ம் ஆண்டு 4500 ஏக்கர் சாகுபடி செய்யப்பட்டது, 2021ம் ஆண்டு 11652 ஏக்கர் சாகுபடி செய்யப்பட்டது. 2022ம் ஆண்டு 12635 ஏக்கர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

குறுவை பட்டத்தில் அதிக மகசூல் கிடைப்பதாலும், மழை காலத்துக்கு முன்னதாகவே அறுவடை செய்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் அரசே கொள்முதல் செய்து கொள்வதால் விவசாயிகள் குறுவை சாகுபடியினை தொடர்ந்து ஆர்வமாக செய்து வருகின்றனர். இரண்டு ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் மூலம் விதை நெல் ரசாயன உரங்கள் மற்றும் மாற்றுப் பயிர் ராகி, உளுந்து ஆகியவை மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுவதால் கூடுதல் ஆர்வத்துடன் குறுவை சாகுபடி செய்துள்ளனர். தற்போது குறுவை சாகுபடி அறுவடை தருணத்தில் இருப்பதால் அடுத்து தாளடி நடவு செய்ய நாற்றங்கால் தயாரிக்கும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர். சம்பா நேரடி நெல் விதைப்பு சுமார் 26 ஆயிரம் ஏக்கரில் செய்யப்பட்டுள்ளது.

பயிர் நன்கு முளைத்து முதல் உரம் விடுகிற பருவத்தில் உள்ளது. சிஆர் 1009 சப் 1, ஆடுதுறை 51, கோ.ஆர் 50, எம்.டி.யூ 7029, ஆடுதுறை 39, ஆடுதுறை 46, முதலிய ரகங்களை நேரடி விதைப்பு செய்துள்ளனர். மேட்டூர் அணையிலிருந்து கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்படுவதால் அனைத்து பகுதிகளிலும் வாய்க்கால்களில் நீர் தாராளமாக வருவதால் விவசாயிகள் அனைவரும் தங்களது வயலில் தண்ணீர் வைத்து உரம் தெளித்து வருகின்றனர். தேவையான யூரியா, டிஏபி, பொட்டாஷ் உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் மற்றும் தனியார் உரக்கடையில் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. பயிர் நன்கு செழித்து வளர்வதற்கு தேவையான நெல் நுண்ணூட்டம் உயிர் உரங்கள் அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டு 50 சதவீதம் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

பாரம்பரிய நெல் சாகுபடி இயற்கை முறையில் பாரம்பரிய நிலங்களை சாகுபடி செய்ய விவசாயிகளை ஊக்கப்படுத்தும் நோக்கில் மானிய விலையில் மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, ஆத்தூர் கிச்சடி சம்பா, தூய மல்லி முதலிய பாரம்பரிய ரகங்கள் 1800 கிலோ விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு தரமான பாரம்பரிய நெல் விதைகளை வழங்குவதற்காக தமிழ்நாடு அரசு விதை பண்ணைகளில் பாரம்பரிய ரகங்களை பயிர் செய்து அதன் மூலம் ஒளிபரப்பு செய்து விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு விவசாயிகள் மிகுந்த ஆர்வத்துடன் பாரம்பரிய ரகங்களை சாகுபடி செய்துள்ளனர். அடுத்தடுத்த வருடங்களில் பாரம்பரிய சாகுபடி பரப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : samba ,Tiruthurapoondi ,kuruvai ,
× RELATED சென்னை- தஞ்சாவூருக்கு 1225 டன் உரம் வந்தது