விவசாயிகள் குறைதீர் கூட்டம்; திருச்சி மாவட்டத்தில் யூரியா மற்றும் உரம் தட்டுபாடில்லாமல் வழங்க வேண்டும்

திருச்சி,அக்.1: திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அனைத்து துறைகளை சேர்ந்த அதிகாரிகளும் பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகளும் பங்கேற்றனர். கூட்டத்தில் கடந்த காலங்களில் திருச்சி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் பரவலாக பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். குறிப்பாக வாழை மற்றும் நெல் ஆகிய இரண்டு பயிர்களும் அதிக மழையால் வயல்களுக்குள் தண்ணீர் நிரம்பி வடியாமல் பயிர் அழுகியதாகவும், அதனை முறையாக ஆய்வு செய்து இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

இதையடுத்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் மாநில தலைவர் வக்கீல் அய்யாக்கண்ணு கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தார். அதில் ஏரி, குளம் பாதை ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வார வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட ெநல் பயிர்களை கணக்கெடுத்து இழப்பீடு வழங்க வேண்டும், உரம் தட்டிப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து ேபசிய விவசாய சங்கத்தினர், நடப்பு பருவத்தில் சம்பா பயிரிட ஆயத்தப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் போதிய யூரியா உரம் போன்றவைகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றும் பட்டா நிலத்தில் உள்ள மரத்தை வெட்டுவது விண்ணப்பித்து பல வாரங்கள் கடந்தும் அதிகாரிகள் காலதாமதம் செய்யாமல் உடனடியாக அனுமதி வழங்கிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் நடராஜன் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: திருச்சி மாயனூரில் இருந்து பிரிந்து வரும் உய்யகொண்டான் கால்வாய் வாழவந்தான் கோட்டை ஏரியில் நிரம்பி அங்கிருந்து தஞ்சை மாவட்டம் பெரிய கோட்டரப்பட்டி வரை உள்ள சுமார் 10 ஏரிகளுக்கும் திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஏரிகளுக்கும் தண்ணீர் நிரப்பி வருகிறது. இந்த தண்ணீரில் உழவு ஓட்டவும், விவசாயிகள் குடித்தும் வந்தனர். இந்நிலையில் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் கால்வாயில் வரும் தண்ணீரில் கால் வைத்தால் கூட சொரி, சிரங்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. திருச்சி பாலக்கரை பகுதியில் சாக்கடை நீர் கலந்து வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். எனவே இதில் தாங்கள் தலையீடு செய்து விசாரணை செய்து உய்யகொண்டான் வாய்க்காலில் சாக்கடை நீர் கலப்பதை தடுத்து மக்களை பாதுகாத்திட வேண்டும்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் சிதம்பரம் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருத்ததாவது : திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் மொண்டிப்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு காகித உற்பத்தி நிறுவனம் கழிவுகளை சுத்திகரிக்காமல் குவித்து வருவதால் மிகப்பெரிய அளவில் சுகாதார கேடும், துர்நாற்றமும் வீசி வருகிறது. எனவே கழிவுகளை சுத்திகரித்து சுகாதார சீர்கேட்டை சரிசெய்ய வேண்டும். காவிரியில் செல்லும் உபநீரை மணப்பாறை, மருங்காபுரி தாலுகா பகுதி நீர் தேக்கங்களுக்கு குழாய் மூலமாக கொண்டு சென்று

நிரப்பும் திட்டத்தை நிதி ஒதுக்கி நடைமுறைப்படுத்த வேண்டும். அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் பயிர்கடன் மற்றும் வட்டியில்லா நகைக்கடன் வழங்க வேண்டும். மாவட்டத்தின் பல பகுதிகளில் வனவிலங்குகள், காட்டு எருமை, காட்டுப்பன்றி, குரங்கு, மயில் போன்றவற்றால் விவசாய பயிர்கள் அழிந்து வருகிறது. பயிர் பாதிப்பிற்கு இழப்பீடும், காட்டு விலங்குகள் விவசாய பயிர்களை அழிக்காமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தார்.

Related Stories: