சான்றிதழுக்கு விண்ணப்பிக்க பொது இ-சேவை மையங்களை பொதுமக்கள் அணுகலாம்

அரியலூர், அக்.1: அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது: அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும், பல தனியார் கணினி மையங்களில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மட்டும் உருவாக்கப்பட்ட இ-சேவை 20 வகையான வருவாய்த்துறை சான்றிதழ்களும், 6 வகையான முதியோர் உதவித்தொகை திட்டங்களுக்கான விண்ணப்பங்களும் விண்ணப்பிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு விண்ணப்பிக்கும் சான்றிதழ்களில் எழுத்துப்பிழை, தவறான ஆவணங்களை இணைத்தல், இடைத்தரகர்கள் மூலம் அதிக கட்டணம் பெறுதல் போன்ற பல புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

வருவாய்த்துறை சான்றுகளின் விண்ணப்பம் ஒன்றிற்கு ரூ.60, ஓய்வூதிய திட்டம் தொடர்பான விண்ணப்பம் ஒன்றிற்கு ரூ.10, சமூகநலத்துறையின் மூலம் வழங்கப்படும் திருமண நிதியுதவித் திட்டங்கள் மற்றும் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டங்கள் தொடர்பான விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்வதற்கு மனு ஒன்றிற்கு ரூ.120, இணையவழி பட்டா மாறுதல் தொடர்பான விண்ணப்பம் ஒன்றிற்கு ரூ.60, அரசு பொது இ-சேவை மையங்களில் சேவைக்கட்டணமாக அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இ-சேவை மையம் நடத்துவதற்கான அரசு உரிமம் பெற்றுள்ள தனியார் கணினி மையங்களில் மேலே குறிப்பிட்ட சேவைக் கட்டணத்தை விட கூடுதலாக வசூல் செய்வது தெரிய வந்தால் உரிமம் ரத்து செய்யப்படும். பொதுமக்கள் இடைத்தரகர்களைத் தவிர்த்து, வட்டாட்சியர் அலுவலகங்களில் அமைந்துள்ள பொது இ-சேவை மையங்கள், கூட்டுறவு சங்க வங்கிகளில் அமைந்துள்ள பொது இ-சேவை மையங்கள், கிராமப்புறங்களில் கிராம வறுமை ஒழிப்பு கட்டிடங்களில் இயங்கி வரும் பொது இ-சேவை மையங்கள் மற்றும் அரசு உரிமம் பெற்ற தனியார் கணினி மையங்களை அணுகலாம். மேலும் சான்றிதழ்கள் விண்ணப்பிக்க அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக வசூல் செய்வது தொடர்பான புகார்களை tnesevaihelpdesk@tn.gov.in < mailto:tnesevaihelpdesk@tn.gov.in > என்ற மின்னஞ்சல் முகவரியில் தெரிவிக்கலாம் என மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Related Stories: