கரூர் மாநகராட்சி சார்பில் மக்கும் குப்பையில் இருந்து நுண்ணுயிர் கலவை உரம் தயாரிப்பு

கரூா்,அக்.1: கரூர் மாநகராட்சி மூலமாக மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரித்து விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், ஆணையர் ரவிச்சந்திரன், துணை மேயர் தாரணி சரவணன் மற்றும் துறை அதிகாரிகள் சார்பில் கரூர் மாநகராட்சி பகுதியில் பொதுமக்களிடம் மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகளை தனித்தனியாக பிரித்து மாநகராட்சிக்கு சொந்தமான பாலம்மாள்புரம் நுண் உர செயலாக்க மையம் மூலம் உரம் தயாரித்து விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி செயல்பட்டு வருகிறது. கரூர் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்க வைத்து அதனை உரமாக்கி விவசாயிகளுக்கு டிராக்டர் மூலம் அனுப்பி வைத்து விவசாய பயன்பாட்டிற்கு இலவசமாக வழங்கப்படுகிறது இதுவரை மாநகராட்சி மூலம் சுமார் 5 டன் அளவிற்கு நுண்ணுயிர் கலவை உரம் தயாரித்து விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இதன்படி நேற்று பாலம்பாள்புரம் நுண் உர செயலாக்க மையத்தில் இருந்து விவசாயிகளுக்கு மாநகராட்சி சுகாதார அதிகாரி டாக்டர் லட்சிய வர்மா, சுகாதார ஆய்வாளர் பிரபாகர் ஆகியோர் நேரடியாகச் சென்று வழங்கினர்.

Related Stories: