×

கால்நடைகளுக்கு புதிதாக பரவும் நோயை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தப்படும் விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் தகவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது


வேலூர், அக்.1: கால்நடைகளுக்கு புதிதாக பரவும் வைரஸ் நோயை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. தடுப்பூசிகள் வந்தவுடன் மாடுகளுக்கு செலுத்தப்படும் என வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் அதிகாரி தெரிவித்தார். வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் வேளாண்மை. மின்வாரியம், வருவாய்த்துறை, வனத்துறை என அனைத்துத்துறை அதிகாரிகள் உட்பட பலர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து பேசினர்.

கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கைகளையும், குறைகளையும் தெரிவித்து பேசியதாவது: பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிடுவதற்கு விதைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் எந்த பருவத்தில், எப்போது, எந்த ரகம் பயிரிட வேண்டும் என்பது குறித்து சில விவசாயிகளுக்கு தெரியவில்லை. எனவே விவசாயிகளுக்கு அது குறித்த தகவல்கள் அடங்கிய கையேடுகள் வழங்க வேண்டும். ஆந்திர மாநிலத்தில் மாடுகளுக்கு புதிய வகை நோய் பரவுகிறது. இதனால் காய்ச்சல் ஏற்பட்டு ஓரிரு நாட்களில் மாடுகள் இறந்து விடுகின்றன. குறிப்பாக ஆந்திர எல்லையை ஒட்டிய பகுதிகளில் மாடுகளுக்கு நோய் பரவ வாய்ப்பு உள்ளது. அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மாடுகளுக்கு தடுப்பூசி போட வேண்டும். பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட ஆய்வு செய்ய வேண்டும். பாலாற்றின் ஓரம் குறிப்பிட்ட இடங்களில் 200 முதல் 300 வேப்ப மரங்கள் வளர்ந்துள்ளன. இம்மரங்களை காப்பாற்ற மரங்களில் வரிசையாக எண்களை குறிப்பிட வேண்டும்.

செஞ்சி பகுதியில் அமைந்துள்ள குட்டையை தூர்வார வேண்டும். ராஜா தோப்பு அணையை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும். மாவட்டத்தில் கூட்டு பட்டாவாக வைத்துள்ளவர்களுக்கு தனிப்பட்டாவாக மாற்றித்தர வேண்டும். நிலத்தை அளப்பதற்கு தாமதம் ஏற்படுகிறது. இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலூர் பஸ் நிலையத்தில் இருந்த ஜூஸ் தொழிற்சாலை இடிக்கப்பட்டதால், புதிய ஜூஸ் தொழிற்சாலை அமைக்க வேண்டும். ஒடுகத்தூர் பகுதியில் கொய்யா விளைச்சல் அதிகமாக உள்ளது. அங்கு கொய்யா ஜூஸ் தொழிற்சாலை அமைக்கப்பட வேண்டும்.

வேலூர் வேளாண்மை விரிவாக்க மையம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட வேண்டும். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை கால இடைவெளியில் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் குறைகளை தெரிவித்து பேசினர். இதற்கு அதிகாரிகள் பதிலளித்து பேசுகையில், ‘கால்நடைகளுக்கு புதிதாக பரவும் வைரஸ் நோயை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. தடுப்பூசிகள் வந்தவுடன் மாடுகளுக்கு செலுத்தப்படும். பாலாற்றங்கரை வேப்ப மரங்களுக்கு எண்கள் குறிப்பிட நடவடிக்கை எடுக்கப்படும்.

வேலூர் மாவட்டத்தில் பட்டா தொடர்பாக 2 ஆயிரம் மனுக்கள் வந்துள்ளன. போதுமான எண்ணிக்கையில் சர்வேயர்கள் இல்லை. தற்போது 22 பேர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். விஏஓக்கள் மூலமும் நிலம் அளக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஒடுகத்தூர் பகுதியில் கொய்யா ஜூஸ் தொழிற்சாலை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. அதற்கு வனத்துறை அனுமதி அளிக்கவில்லை. எனவே மாற்று இடம் தேடப்படுகிறது. இவ்வாறு அவர்கள் பேசினர். தொடர்ந்து பேரணாம்பட்டு அருகே சிறுத்தை இறந்தது தொடர்பாக விவசாயிகள் பேசும்போது, ‘பேரணாம்பட்டு சாரங்கல் பகுதியில் சிறுத்தை இறந்தது தொடர்பாக நடந்த பிரேத பரிசோதனையில் எதுவும் சொல்லவில்லை.

ஆனால் மின்சாரம் தாக்கி சிறுத்தை இறந்ததாக வனத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விவசாயி மோகன்ராஜை கைது செய்துள்ளனர். சத்தம் எழுப்பும் கருவிதான் வைக்கப்பட்டுள்ளது’ என தெரிவித்தனர். மேலும் அக்கருவிகளை எடுத்து வந்து கூட்டத்தில் விவசாயிகள் காட்டினர். தொடர்ந்து ‘இது பல ஆண்டுகளாக வனத்துறை அதிகாரிகளுக்கு தெரிந்தேதான் வைக்கப்படுகிறது. கலெக்டர் அல்லது டிஆர்ஓ நேரில் வந்து ஆய்வு செய்து உண்மை கண்டறிய வேண்டும். வழக்கை திரும்ப பெற வேண்டும்’ என்றனர். இதையடுத்து டிஆர்ஓ ராமமூர்த்தி, ‘மனு கொடுங்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உறுதி அளித்தார். தொடர்ந்து விவாதம் நடந்து முடிந்தது.

Tags :
× RELATED ஆட்டுச்சந்தையில் ஆடுகள் விலை கிடு...