ஆட்டோ டிரைவரிடம் ரூ.79 ஆயிரம் மோசடி

ராமநாதபுரம், அக்.1: தேவிபட்டினம் அருகே பொட்டகவயல் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் முஹமது தவ்பீக் அலி(27).பொட்டகவயலில் 7 ஆண்டுகளாக சொந்தமாக ஆட்டோ ஒட்டி வருகிறார். ஆட்டோவிற்கு மாற்றாக பழைய கார் வாங்கி சவாரி துவங்க திட்டமிட்டிருந்தார். இது தொடர்பாக பிரபல கார் சவாரி இணையதளத்தில் கார் வாங்குவது தொடர்பான விளம்பரங்களை கடந்த 25 ஆம் தேதி பார்த்தார். தனது பட்ஜெட் தொகைக்கு ஏற்ற காரை தேர்வு செய்து விளம்பரத்தில் அதில் தெரிவித்த கைபேசி எண்ணில் முஹமது தவ்பீக் அலி தொடர்பு கொண்டார். ஆங்கிலத்தில் பேசிய நபர், ஐதராபாத் ராணுவ முகாமில் பணியாற்றிய வருவதாக கூறியவர், தனது பழைய காரை ரூ.2.50 லட்சத்திற்கு தருவதாக ஒப்புக்கொண்டார். அது தொடர்பான ஆவணங்கள், காரின் போட்டோவை முஹமது தவ்பீக் அலியின் வாட்ஸ்ஆப் எண்ணிற்கு அனுப்பினார்.

ஆவணங்களும் அனைத்தும் சரியாக இருந்ததால் உண்மை என நம்பி, அவர்கள் கூறிய விதிமுறைகளின் படி ரூ.5 ஆயிரம் அட்வான்ஸ் தொகையை அனுப்பினார். இதன் பின் முஹமது தவ்பீக் அலியின் முகவரியை பெற்றுக்கொண்டு, ராணுவ கூரியர் லாரி மூலம் காரை அனுப்ப ரூ.4 ஆயிரம், இது போல் பல்வேறு காரணங்களை கூறி 7 முறை ரூ.79 ஆயிரத்து 200 பெற்று கொண்டனர். ராணுவ வீரர் என போலி அடையாள அட்டை தயாரித்து, பழைய காரை விற்பதாக கூறி ரூ.79 ஆயிரத்து 200ஜ ஏமாற்றிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இழந்த தொகையை பெற்றுத்தர வேண்டும் என காவல் துறை இணைய தளத்தில் முஹமது தவ்பீக் அலி அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் ராஜன் விசாரித்து வருகிறார்.

Related Stories: