ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்த ரூ150 கோடி கோயில் நிலம் மீட்பு: வருவாய்துறை நடவடிக்கை

சென்னை: கொளத்தூர் பூம்புகார் நகர் 1வது மெயின் ரோடு பகுதியில் சோமநாத ஈஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடம் மற்றும் வருவாய் துறைக்கு சொந்தமான 3 ஏக்கர் 55 சென்ட் நிலம் உள்ளது. இந்த இடத்தினை சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஆக்கிரமித்து மெக்கானிக் கடைகள், ஓட்டல்கள், மணல் ஜல்லி விற்பனை செய்யும் கடைகள் வைத்திருந்தனர். இந்நிலையில் கொளத்தூர் தொகுதியில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டப்படும் என தமிழக முதல்வர் அறிவித்து, தற்போது கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி எவர்வின் பள்ளி வளாகத்தில் இயங்கி வருகிறது. விரைவில் அந்த கல்லூரி சொந்த கட்டிடத்தில் இயங்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் என அறநிலையத்துறை துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பூம்புகார் நகர் பகுதியில் உள்ள சோமநாத ஈஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடம் மற்றும் வருவாய் துறைக்கு சொந்தமான இடம் என மொத்தம் சேர்த்து 3 ஏக்கர் 55 சென்ட் நிலத்தை இந்து அறநிலையத் துறைக்கு ஒப்படைத்து, கபாலீஸ்வரர் கோயில் சார்பில் கல்லூரி கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த 1 மாதத்திற்கு முன்பு அந்த இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களுக்கு முறையாக நோட்டீஸ் வழங்கப்பட்டது. இருந்த போதிலும் ஆக்கிரமிப்பாளர்கள் பலர் அந்த இடத்தை விட்டு காலி செய்யாமல் இருந்தனர்.

இதனையடுத்து, அயனாவரம் தாசில்தார் ராமு மேற்பார்வையில் அறநிலையத் துறையின் சென்னை மண்டல இணை ஆணையர் தனபால் கபாலீஸ்வரர் கோயில் இணை ஆணையர் காவேரி, கொளத்தூர் சோமநாத ஈஸ்வரர் கோயில் செயல் அலுவலர் ஜெயராமன் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று காலை சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று வருவாய்த்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உதவியோடு அந்த இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தினர். 75 சதவித பணிகள் நேற்று முடிந்துள்ளதாகவும், மீதமுள்ள 25 சதவித பணிகள் இன்று முடிக்கப்படும் எனவும், அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு சுமார் ரூ.150 கோடி இருக்கும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories: