இலங்கைக்கு ஹெராயின் கடத்திய இருவருக்கு 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: நாட்டின் நீடித்த வளர்ச்சி, சமூக, பொருளாதார, அரசியல்  ஸ்திரத்தன்மை ஆகியவை போதைப் பொருளால் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள சென்னை போதைப்  பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் ஹெராயின் கடத்திய 2 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு கடந்த 2017ம்  ஆண்டு மே 5ம் தேதி செல்ல இருந்த திருவள்ளுர் மாவட்டம் நெமிலிச்சேரியை சேர்ந்த மஹின்  அபுபக்கர், சிவகங்கை தேவக்கோட்டையை முகமது மீரா ரஜூலுதீன் ஆகியோர்  2 கிலோ ஹெராயின் வைத்திருந்ததாக வருவாய் புலனாய்வு துறையினர் அவர்களை கைது  செய்தனர். அவர்கள் மீது போதைப்பொருள் தடுப்பு சட்ட பிரிவுகளின்கீழ் வழக்கு  தொடரப்பட்டது.

இந்த வழக்கு சென்னை போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான  சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெ.ஜூலியட் புஷ்பா முன்னிலையில் விசாரணைக்கு  வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்களுடன்  நிரூபிக்கப்பட்டதால் இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் தலா  ரூ.2 லட்சம் அபராதமும் விதித்த தீர்ப்பளித்தார்.

தீர்ப்பில், பொது  சுகாதாரத்திற்கு பெருத்த அச்சுறுதலாக போதைப் பொருள் உள்ளது. அதனால் உலக  சமுதாயம் தீவிர அச்சுறுத்தலை சந்தித்து வருகிறது. நாட்டின்  நீடித்த வளர்ச்சி, சமூக, பொருளாதார, அரசியல் ஸ்திரத்தன்மை ஆகியவை போதைப்  பொருளால் பாதிக்கப்படுகிறது. பயங்கரவாத குழுக்களும் போதைப்பொருள் கடத்தலில்  ஈடுபடுவதால் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று கருத்து  தெரிவித்துள்ளார்.

Related Stories: