கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை சரிவு

அண்ணாநகர்: தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து காய்கறிகள் லாரிகள் மூலம் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினசரி வருகின்றன. இந்த நிலையில் நேற்று காலை 500 வாகனங்களில் இருந்து 6,000 டன் காய்கறிகள் வந்தன. இதனால், இரண்டு வாரங்களாக தொடர்ச்சியாக  ரூ120க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ கேரட் நேற்று காலை ரூ70க்கும், ரூ60க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ அவரை ரூ30க்கும்,   ரூ80க்கு விற்பனை செய்யப்பட்ட  ஒரு கிலோ பீட்ரூட் ரூ30க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், ஒரு கிலோ நாட்டு தக்காளி ரூ28ல் இருந்து ரூ33க்கும், பெங்களூரு தக்காளி ரூ30ல் இருந்து ரூ35க்கும் வெண்டைக்காய் ரூ20லிருந்து ரூ28க்கும், சின்ன வெங்காயம் ரூ40லிருந்து ரூ60க்கும், பெரிய வெங்காயம் ரூ20லிருந்து ரூ28க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதுகுறித்து கோயம்பேடு காய்கறி சிறு மொத்த வியாபாரிகளின் சங்க தலைவர் முத்துகுமார் கூறுகையில், ‘‘தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, மாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் மழை பெய்து வந்தாலும், காய்கறிகள் தட்டுபாடு இல்லாமல் வருகிறது. நேற்று 500 வாகனங்களில் 6,000 டன் காய்கறிகள் வந்தன. கேரட் மற்றும் பீட்ரூட் 2 வாரங்களாக விலை நீடித்து வந்த நிலையில், நேற்று விலை குறைந்து உள்ளது. சில காய்கறிகள் ரூ5 லிருந்து ரூ10 உயர்ந்துள்ளது. மேலும்  மழைநீடித்தால் காய்கறிகளின் விலை உயரும்,’’ என்றார்.

Related Stories: