×

வேகமாக காய்ச்சல் பரவுவதை தடுக்க கொசு ஒழிப்பு பணியில் 3,271 பணியாளர்கள்: சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை:  சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில் மாநகராட்சி அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி கொசு ஒழிப்பு பணியில் 954 கொசு ஒழிப்பு நிரந்தர பணியாளர்கள், 2,317 ஒப்பந்த பணியாளர்கள் என மொத்தம் 3,271 பணியாளர்கள்  ஈடுபட்டு வருகின்றனர். மேலும், 224 மருந்து தெளிப்பான்கள், 120 பவர் ஸ்ப்ரேயர்கள், பேட்டரி மூலம் இயங்கும் 300 ஸ்ப்ரேயர்கள், 229 கையினால் இயங்கும் புகை பரப்பும் இயந்திரங்கள், 8 சிறிய புகை பரப்பும் இயந்திரங்கள் மற்றும் 67 வாகனங்களில் பொருத்தப்பட்ட புகை பரப்பும் இயந்திரங்கள் கொண்டு கொசுக்களை கட்டுப்படுத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தொடர்ந்து, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்களில் கொசுப்புழுக்களை அழிக்க ஒரு வார்டுக்கு கொசுமருந்து தெளிப்பான்களுடன் இரண்டு நபர்கள் என 200 வார்டுகளுக்கும் 400 நபர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.  இவர்கள் ஒரு குழுவிற்கு 2 நபர்கள் என நாளொன்றிற்கு ஒரு கி.மீ. தூரத்திற்கு கொசு மருந்து தெளிக்க வேண்டும்.  ஒரு இடத்தில் வாரத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக மருந்து தெளிக்க வேண்டும், என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், 247 கி.மீ. நீர்வழித்தடங்களில் கொசு மருந்து தெளிக்க 128 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.  இவர்கள் ஒரு குழுவிற்கு 3 நபர்கள் என நீர்வழித்தடங்களில்  நாளொன்றிற்கு ஒரு கி.மீ தூரத்திற்கு கொசு மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

குடிசைப் பகுதிகள், பூங்காக்கள் மற்றும் சாலைகள்  ஆகிய பகுதிகளில் புகை பரப்பும் இயந்திரங்கள் கொண்டு கொசுப் புழுக்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.  நாள்தோறும் காலை 6 மணி முதல் 7.30 மணி வரையிலும்,  மாலை 6 மணி முதல் 7.30  வரையிலும் புகை பரப்பும் இயந்திரங்கள் கொண்டு கொசு ஒழிப்பு  பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

10,97,632 வீடுகளில் ஆய்வு
மாநகராட்சி பணியாளர்கள் மூலம் 10,97,632 வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட களஆய்வில் 9,117 வீடுகளில் கொசுப்புழு வளரிடங்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள  திறந்த நிலையில் உள்ள கிணறுகள், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள், கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்கள் மற்றும் காலிமனைகள் ஆகிய இடங்களில் மாநகராட்சி களப் பணியாளர்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு கொசுப்புழு வளரிடங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.

ஒத்துழைக்க வேண்டும்
கிணறு, மேல்நிலைத் தொட்டி, கீழ்நிலைத் தொட்டி, தண்ணீர் தொட்டிகள் முதலியவற்றை கொசுக்கள் மற்றும் கொசுப்புழு புகாவண்ணம் மூடி வைக்க வேண்டும். தண்ணீர் நிரப்பிய பூ ஜாடி மற்றும் கீழ்த்தட்டு, குளிர்பதன பெட்டியின் கீழ்த்தட்டு, மணிபிளான்ட் போன்றவற்றில் தேங்கி நிற்கும் தண்ணீரை வாரம் ஒருமுறை அகற்றி தங்களின் வீடு மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும். வீடுகளில் களஆய்வு மேற்கொள்ள மண்டல சுகாதார அலுவலரால் வழங்கப்பட்ட மாநகராட்சி அடையாள அட்டையுடன் வரும் மாநகராட்சி பணியாளர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை
தற்போது மழை அவ்வப்போது பெய்து வருவதால், மழைநீர் தேங்கக்கூடிய இடங்களில் கொசுப்புழுக்கள் வளர வாய்ப்புள்ளது.  எனவே,  பொதுமக்கள் தங்களின் வீடு மற்றும் சுற்றுப்புறத்தில் உபயோகமற்ற டயர், தேங்காய் சிரட்டைகள், உடைந்த குடங்கள், உடைந்த சிமென்ட் தொட்டிகள் முதலியவற்றில் தண்ணீர் தேங்கி கொசுப்புழு உருவாகும் வாய்ப்புள்ளதால், அதனை உடனடியாக மக்கள்  அகற்ற வேண்டும்.

Tags : Chennai Municipal Corporation ,
× RELATED சென்னையில் போலீசார் தபால் வாக்கு...