போலீஸ் விசாரணைக்கு பயந்து போதை மாத்திரை சாப்பிட்ட ரவுடி சிகிச்சை பலனின்றி பலி

பெரம்பூர்: அயனாவரம் ஏகாங்கிபுரம் 4வது தெருவை சேர்ந்தவர் ஆகாஷ் (20). இவர்மீது ஓட்டேரி, வியாசர்பாடி, ராஜமங்கலம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவர், கடந்த 20ம் தேதி இரவு மது போதையில் பெரம்பூர் மங்களபுரம் சந்திரயோகி சமாதி தெரு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாலகிருஷ்ணமூர்த்தி (37) என்பவருக்கு சொந்தமான காரின் முன்பக்க கண்ணாடியை தனது நண்பனுடன் சேர்ந்து கல்லால் அடித்து உடைத்தார். மேலும், அங்குள்ள வாகனங்களை எட்டி உதைத்து ரகளையில் ஈடுபட்டார். இவை அனைத்தும் அப்பகுதியிலிருந்து சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.

இதுகுறித்து, பாலகிருஷ்ணமூர்த்தி ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த ஓட்டேரி இன்ஸ்பெக்டர் ஜானி செல்லப்பா தலைமையிலான போலீசார், கடந்த 21ம் தேதி மாலை ஆகாஷை கைது செய்து, காவல் நிலையம் அழைத்து வந்தனர். அப்போது அவர் முழு போதையில் இருந்ததால், அக்கா காயத்ரி என்பவரிடம் எழுதி வாங்கிக்கொண்டு நாளை காலை மீண்டும் ஆகாஷை காவல் நிலையம் அழைத்து வரவேண்டும் என்று கூறி அனுப்பி வைத்தனர். அப்போது ஆகாஷ், நாளை எப்படி நான் காவல் நிலையம் வருகிறேன் என்று பாருங்கள் என போலீசாரிடம் போதையில் கூறிவிட்டு சென்றுள்ளார்.

அதன்பிறகு, இரவு அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு, போதை மாத்திரைகளை உட்கொண்டதாக கூறப்படுகிறது. அதிகமான போதை மாத்திரைகளை உட்கொண்டதால் உடல்நிலை மோசமாகி அன்று இரவே அவரது குடும்பத்தினர் அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த 8 நாட்களாக அவருக்கு சிகிச்சை அளித்த போதிலும், மருத்துவர்கள் கொடுத்த மருந்து அவருக்கு ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் சிறு வயதிலிருந்து அளவுக்கு அதிகமான போதை மாத்திரங்களை உட்கொண்டதால் ஆகாஷின் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், போலீசார் அழைத்து சென்று ஆகாஷை அடித்துள்ளனர், என அவரது உறவினர்கள் சிலர் குற்றம் சாட்டினர். இதுகுறித்து போலீசார் தரப்பில் விசாரித்தபோது, ஆகாஷ் முழு மதுபோதையில் இருந்ததால் உடனடியாக அவரது வீட்டிற்கு தகவல் தெரிவித்து அவரது உறவினர் வந்து அழைத்து சென்றுள்ளார். அவரை அழைத்துச் சென்றதற்கு அனைத்து ஆதாரங்களும் உள்ளது. மேலும் ஆகாஷ், காவல் நிலையத்திற்கு  உள்ளே வருவதும், வெளியே செல்வதும் சிசிடிவிக்கு காட்சியில் தெளிவாக பதிவாகியுள்ளது. மேலும் அவர் போதை மாத்திரைக்கு அடிமையானவர் என்பது அவரது குடும்பத்திற்கு நன்றாக தெரியும். எனவே, இதில் போலீசாரின் தவறு எதுவும் இல்லை என தெரிவித்தனர். இதுகுறித்து, உயர் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இதுசம்பந்தமாக எழும்பூர் 10வது குற்றவியல் நடுவர் லட்சுமி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Related Stories: