மக்களை காப்பதில் அக்கறை காட்டி பொதுசுகாதாரத்தில் அசத்தும் முத்துப்பேட்டை வட்டார மருத்துவத்துறை

முத்துப்பேட்டை,செப்.30: மக்களை காப்பதில் அக்கறை காட்டி, பொதுசுகாதாரத்தில் முத்துப்பேட்டை வட்டார மருத்துவத்துறை அசத்தி வருகிறது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை வட்டாரத்தில் இரண்டு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களும் இடும்பாவனத்தில் ஒரு கூடுதல் சுகாதார நிலையமும் செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி அம்மலூர், மருதவனம், குண்ணலூர், கீழபாண்டி, பின்னத்தூர், உதயமார்த்தாண்டபுரம், ஓவரூர், ஆலங்காடு, ஜாம்பவான்னோடை, கோவிலூர், முத்துப்பேட்டை, மருதங்காவெளி, செம்படவங்காடு, துரைதோப்பு, தில்லைவிளாகம், இடும்பாவனம், மேலபெருமழை, கற்பகநாதர்குளம் ஆகிய பகுதியில் 18 துணை சுகாதார நிலையங்களும் இயங்கி வருகிறது. இதில் வட்டார சுகாதாரத்துறை சார்பில் வட்டார மருத்துவ அலுவலர் கிள்ளிவளவன் தலைமையில் பொது மருத்துவர்கள், கண் மருத்துவர்கள், பல் மருத்துவர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொது சுகாதார பணிகளுக்கு வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மனோகரன், மருத்துவ சாரா மேற்பார்வையாளர் பாஸ்கரன், சுகாதார ஆய்வாளர்கள் பழனியப்பன், ராஜ்குமார், பால சண்முகம், கதிரவன், விக்னேஷ், அதுமட்டுமின்றி செவிலியர்கள், துணை செவிலியர், மஸ்தூர் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மருத்துவ குழுவின் மூலம் தினசரி புறநோயாளி சேவை நடைபெறுகிறது. ஆய்வக சேவை ரத்த கொதிப்பு சர்க்கரை நோய் காசநோய் ஒழிப்புத்திட்டத்தின் கீழ் சளி, எக்ஸ்ரே பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு காசநோயாளிகள் கண்டறியப்படுகிறது.

6 மாத காலத்திற்கு காசநோய் மருந்துகள் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் காசநோய் சிகிச்சையின் போது 6 மாத காலத்திற்கு மத்திய மாநில அரசுகளால் ஊக்க தொகை வழங்கப்படுகிறது. முத்துப்பேட்டை - இடும்பாவனத்தில் சித்த மருத்துவ பிரிவும் சங்கந்தி எடையூர் ஊராட்சியில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவும் சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. கர்ப்பகால பாரமரிப்பு 24 மணிநேர பிரசவ சேவை. முத்துப்பேட்டை சங்கந்தி எடையூரில் குடும்பநல அறுவை சிகிச்சை செயல்படுகிறது. கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் வாராந்தோறும் புதன்கிழமைகளில் கிராம சுகாதார செவிலியர்கள் மூலம் தடுப்பூசி பணிகள் நடைபெறுகிறது.

தமிழக அரசின் சிறப்பு திட்டமான மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் இப்பகுதியில் கூடுதலாக 15 செவிவலியர்கள் பணியமர்த்தப்பட்டு துணை சுகாதார நிலையங்களில் சர்க்கரை, ரத்த கொதிப்பு நேயாளிகள் கிராமங்களில் கண்டறியப்பட்டு பெண் தன்னார்வலர்கள் மூலம் மருந்து மாத்திரைகள் வீடு தேடிச் சென்று வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டு வீட்டில் உள்ள நோயாளிகளுக்கு பிசியோதெரபிஸ்ட் நடமாடும் வாகனத்தில் சென்று பிசியோதெரபி சிகிச்சை அளித்து வருகிறார். இதுவரை மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர் பயனடைந்துள்ளனர்.

பள்ளிசிறார் நலத்திட்டத்தின் மூலம் பள்ளிகளுக்கு மருத்துவர்கள் வாகனங்களில் சென்று பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கிறார்கள். மாணவர்களுக்கு ஆண் மருத்துவர் தலைமையிலான மருத்துவ குழுவும் மாணவிகளுக்கு பெண் மருத்துவர் தலைமையிலான மருத்துவ குழுவும் இப்பணியை மேற்கொண்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் உணர்ச்சியற்ற தேமல் அறிகுறி உள்ளவர்கள் ஆரம்ப நிலையிலேயே கண்டயறியப்பட்டு மருத்துவர் சாரா மேற்பார்வையாளர் மூலம் உரிய சிகிச்சை தரப்படுகிறது. ஊனமுற்ற தொழுநோயாளிகளுக்கு மாதம் ரூ.1500 உதவித்தொகை வழங்கப்படுகிறது.

நடமாடும் மருத்துவ வாகனம் மூலம் தூரத்தில் உள்ள குக்கிராமங்களுக்கு மருத்துவ செவிலியர், ஆய்வக நுட்புணர் அடங்கிய குழு சென்று சிகிச்சை அளித்து வருகிறது. தற்சமயம் சிறப்பு காய்ச்சல் முகாம்கள் தினசரி 4 இடங்களில் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் ஒருமுறை 1000 நபர்கள் பயன் அடைகின்றனர். வருடம் தோறும் வட்டாரத்திற்கு மூன்று இடங்களில் டாக்டர் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்ட முகாம் சிறப்பாக நடத்தப்படுகிறது. இதன் முகாம் மூலம் இந்தாண்டு 3500க்கு மேற்பட்டோர் பயன் அடைந்தனர்.

டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் கீழ் ரூ.18,000 தொகையாவும் பொருட்களாகவும் தகுதி உள்ள தாய்மார்களுக்கு வழங்கப்படுகிறது. இந்நிதியாண்டில் இதுவரை ரூ.24,74000 வழங்கப்பட்டுள்ளது. 6மாதம் முதல்5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு விட்டமின் யு திரவம் வழங்கும் பணி நடைபெற்றது. வருடத்திற்கு இருமுறை (பிப்ரவரி மற்றும் ஆக்ஸ்ட் மாதங்களில் நடைபெறுகிறது. தேசிய குடற்புழு நீக்கம் முகாம் நடைபெறுகிறது. தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு மக்களின் உடல் நலனில் அக்கறை காட்டி பல்வேறு சிறப்பு திட்டங்களை தந்தும் தற்போது உள்ள திட்டங்களுக்கு மேலும் நிதிகளை ஒதுக்கீடு செய்து இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லதாளவில் தமிழகத்தில் சுகாதாரத்துறையை மேம்படுத்தி வருகிறார். இதனால் சுகாதாரத்துறை பணியாளர்களாகிய நாங்கள் திருப்திகரமாக பணியில் ஈடுபட்டு வருகிறோம் என அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: