தஞ்சாவூர் மாநகராட்சியில் மாற்றி அமைக்கப்பட்ட வரி உயர்வு மக்கள் நலனுக்காக பாதியாக குறைப்பு

தஞ்சாவூர், செப்.30: தஞ்சாவூர் மாநகராட்சியில் மாற்றி அமைக்கப்பட்ட வரி உயர்வு பொதுமக்களின் கஷ்டத்தை உணர்ந்து தற்போது பாதியாக குறைக்கப்பட்டுள்ளதாக மேயர் சண்.ராமநாதன் தெரிவித்தார். தஞ்சாவூர் மாநகராட்சி கூட்டம் மேயர் சண்.ராமநாதன் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் சரவணக்குமார் மற்றும் உயர் அலுவலர்கள், மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் உறுப்பினர்கள் தங்களது வார்டுகளுக்கு தேவையான கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அமமுக கண்ணுக்கினியாள், மாநகராட்சியில் மாற்றி அமைக்கப்பட்ட வரி உயர்வை திரும்ப பெற வேண்டும். தமிழக அரசின் மின் கட்டண உயர்வு சாதாரண மக்களை பாதித்துள்ளது. இதை திரும்ப பெற வேண்டும். எனது வார்டில் குடிநீருடன் கழிவு நீரும் கலந்து வருகிறது. இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதற்கு மேயர் சண்.ராமநாதன், மாநகராட்சியில் மாற்றி அமைக்கப்பட்ட வரி உயர்வு பொதுமக்களின் கஷ்டத்தை உணர்ந்து தற்போது பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. மின் கட்டண உயர்வை ஒன்றிய அரசின் உத்தரவிற்கிணங்க உயர்த்தப்பட்டுள்ளது. அவ்வாறு உயர்த்தவில்லை என்றால் ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீடு, மானிய தொகை நிறுத்தப்படும் என்ற நிலை ஏற்பட்டதால் தான் வேறு வழியின்றி மின் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்றார். இதற்கு கண்ணுக்கினியாள், தமிழக முதல்வர் தான் ஒன்றிய அரசை கண்டு பயப்படுபவர் அல்ல என சொல்கிறார்கள். பிறகு ஏன் ஒன்றிய அரசுக்கு பயந்துக் கொண்டு மின் கட்டண உயர்வை அறிவித்துள்ளார் என்றார். இதற்கு மேயர் சண்.ராமநாதன், ஒன்றிய அரசின் நெருக்கடியால் தான் இந்த கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இது இங்குள்ள பா.ஜ.க உறுப்பினருக்கே தெரியும் என்றார்.

பா.ஜ.க. ஜெய்சதீஷ் , ஒன்றிய அரசு மின் கட்டண உயர்வு குறித்து எந்தவித உத்தரவும் இடவில்லை. அவ்வாறு உத்தரவு இருந்தால் மேயர் இந்த அவையிலேயே காட்டலாம் என்றார். இதற்கு மேயர் சண்.ராமநாதன், உத்தரவை அடுத்த கூட்டத்தில் காட்டுகிறேன் என்றார். அதிமுக யு.என்.கேசவன், மின் விளக்கு, பாதாள சாக்கடை அடைப்பு மற்றும் சாக்கடை தூர்வாரும் பணிகளை இரவு, பகலாக மேற்கொண்டு நீண்ட நாள் பிரச்னையை தீர்த்துள்ள மாநகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. எனது வார்டில் ஏராளமான குதிரைகள் சுற்றி திரிகிறது. இதனால் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக உள்ளது. இது தவிர ஏற்கனவே நான் கொடுத்த பல்வேறு பணிகள் குறித்த தீர்மானங்களையும் நிறைவேற்றி தர வேண்டும் என்றார்.

இதற்கு மேயர் சண்.ராமநாதன், இது வரை பெறப்பட்ட தீர்மானங்களை முதலில் நிறைவேற்றுவோம். அடுத்து 2 மாதம் கழித்து மீண்டும் தீர்மானங்களை பெற்று பணிகளை மேற்கொள்வோம். தற்போது செயல்பட்டு வரும் தற்காலிக காய்கறி மார்கெட் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடங்களுக்கு வந்துவிடும். பிறகு தற்காலிக மார்க்கெட் பகுதியில் கால்நடைகள், குதிரை என சாலைகளில் சுற்றி திரிபவை இங்கு பட்டி அமைத்து அடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். திமுக ரம்யா சரவணன், அண்ணா நகர் நுழைவு பகுதியில் உள்ள புது பாலம் பழுதடைந்துள்ளது. இதை சீர் செய்து தர வேண்டும் என்றார். அதிமுக காந்திமதி, பெரிய கோயிலில் வராகி அம்மனுக்கு செய்யப்படும் அபிஷேக நீர் செல்ல வழியின்றி அப்படியே வளாகத்திலேயே தேங்கி நிற்பதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது.

இதை பார்த்து வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலா பயணிகள், பக்தர்கள் முகம் சுளிக்கின்றனர். இதை சரி செய்ய வேண்டும். தீபாவளி பண்டிகையையொட்டி தஞ்சாவூர் மாநகரில் அமைக்கப்படும் சாலையோர கடைகள் பொதுமக்களுக்கு, போக்குவரத்துக்கு இடைஞ்சல் இன்றி அமைக்க இப்போதே தேவையான முன்னேற்பாடுகளை மேற் கொள்ள வேண்டும் என்றார்.

திமுக ஸ்டெல்லா நேசமணி, பல் மருத்துவ முகாமில் பலரும் பயன்பெற்றனர். மேலும் ரத்தசோகை சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட வேண்டும் என்றார். அதிமுக கோபால், திமுக ரேவதி, அதிமுக சரவணன், காங்கிரஸ் ஹைஜாகனி உஷா உள்ளிட்டோர் தங்களது வார்டுகள் குறித்து பேசினர். ஆணையர் சரவணக்குமார், யாரையேனும் நாய் கடித்து பாதிக்கப்பட்டால் ஏற்கனவே நாய்களுக்கு உணவு அளிப்போர்கள் தான் பொறுப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் நாய்கள் கருத்தடைக்கான ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் என்றார்.

திமுக பாலசுப்பிரமணியன், எனது வார்டில் குரங்கு தொல்லை அதிகமாக உள்ளது. இதை கட்டுப்படுத்த வேண்டும். மாநகராட்சி கடைகளை ஏலம் எடுத்தவர்கள் கடை வேண்டாம் என்றால் அவர்கள் செலுத்திய தொகையை திரும்ப கொடுத்துவிடலாம். அவர்களை அலைக்கழிக்க வேண்டாம் என்றார். திமுக சர்மிளாதேவி, எனது வார்டில் காமராஜ் நகர், ஈஸ்வரி நகர் பகுதியில் உயர்மின் விளக்கு கோபுரம் அமைத்து தர வேண்டும் என்றார்.இதற்கு மேயர் சண்.ராமநாதன், நகர்நல கட்டடப் பணிகள் சரியாக நடப்பது குறித்து பொறியாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு  செய்வார்.

Related Stories: