திருவாரூர் மாவட்டத்தில் 430 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

திருவாரூர்,செப்.30: திருவாரூர் மாவட்டத்தில் இருந்து வரும் 430 கிராம ஊராட்சிகளிலும் நாளை மறுதினம் (2ம்தேதி) கிராம சபை கூட்டங்கள் நடைபெறவுள்ளதாக கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 430 கிராம ஊராட்சிகளிலும் நாளை மறுதினம் (2ந் தேதி) காந்தி ஜெயந்தி அன்று கிராம சபை கூட்டங்கள் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம், தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்ட கணக்கெடுப்பு, தூய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் இயக்கம், சமுதாயம் சார்ந்த அமைப்புகளில் நிர்வாகிகளை சுழற்சி முறையில் மாற்றம் செய்தல், பண்ணை சார்ந்த, சாரா தொழில்கள் மற்றும் இதர தலைப்புகளில் விவாதிக்கப்படவுள்ளது. கிராம ஊராட்சிகள் அனைத்து நிலைகளிலும் தன்னிறைவை பெறும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு நடவடிக்கைகள், திட்டப்பணிகள் குறித்து விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்ற இருக்கும் நிலையில் அனைத்து தரப்பு பொதுமக்களும் தவறாமல் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவிப்பதோடு, தங்கள் ஊராட்சியின் வளர்ச்சியில் தங்கள் பங்களிப்பையும் முழுமையாக வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Related Stories: