பாரம்பரிய நெல் ரகங்களை சிறப்பு விலையில் கொள்முதல் செய்ய வேண்டும்

திருத்துறைப்பூண்டி,செப்.30: பாரம்பரிய நெல்ரகங்களை சிறப்பு விலையில் கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆதிரெங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜிவ் விசாயிகள் சார்பில் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது: பாரம்பரிய நெல் ரகங்களை பரவலாக்கும் விதமாக தமிழக அரசு நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் வேளாண்மை விதை பண்ணைகளில் பாரம்பரிய நெல் விதைகளை உற்பத்தி செய்து 50 சதவிகித மானிய விலையில் வழங்குவதன் மூலம் பாரம்பரிய நெல் சாகுபடி செய்யும் பரப்பளவு அதிகரித்து உள்ளது. இந்த திட்டம் விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் விதை வாங்கி செல்லும் விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் சாகுபடி தொழில்நுட்பம் சரிவர தெரியாத காரணத்தால் உற்பத்தி குறைவதற்கு வாய்ப்புள்ளதால் முன்னோடி இயற்கை விவசாயிகளை கொண்டு வட்டார அளவில் தேவையான பயிற்சிகள் வழங்க வேளாண்மைத்துறை முன்வர வேண்டும். மேலும், இயற்கை விவசாயம் செய்வதற்கு தேவையான இடுபொருட்களை உழவர்களே உற்பத்தி செய்து கொள்ள மானியம் வழங்க வேண்டும். மேலும் விவசாயிகள் உற்பத்தி செய்த பாரம்பரிய நெல் ரகங்களை சிறப்பு விலையில் கொள்முதல் செய்ய அரசு முன்வந்தால் மட்டுமே பாரம்பரிய நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் தொடர்ந்து இயற்கை முறையில் சாகுபடி செய்வதற்கு முன்வருவார்கள். இதுவரை இயற்கை விவசாயிகள் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் எந்தவொரு அரசு திட்டங்களும் கிடைக்கப்பெறாத நிலையில், தமிழக அரசு பாரம்பரிய நெல் ரகங்களை கொள்முதல் செய்ய, தனி கவனம் செலுத்தி இயற்கை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த முன்வரவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: