×

தமிழக அரசுக்கு கிராம மக்கள் பாராட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் 497 கிராம ஊராட்சிகளில் கிராம சபைக்கூட்டம்

புதுக்கோட்டை, செப்.30: புதுக்கோட்டை மாவட்டத்தில் 497 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் 2ம் தேதி நடக்கிறது என்ற கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது; காந்தி ஜெயந்தி தினமான 2ம்தேதி காலை 11 மணிக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 497 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, ஊரகப்பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்தி எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்ட கணக்கெடுப்பு, தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம், சமுதாயம் சார்ந்த அமைப்புகளில் நிர்வாகிகளை சுழற்சி முறையில் மாற்றம் செய்தல், பண்ணை சார்ந்த மற்றும் சாரா தொழில்கள் மற்றும் இதர பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் விவாதிக்கப்பட உள்ளன.
மேற்குறிப்பிட்டுள்ள அரசின் திட்டங்கள் மற்றும் ஊராட்சியின் செயல்பாடுகள் பற்றிய விபரங்களை தெரிந்து கொண்டு பயன்பெறும் வகையில் பொதுமக்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சார்ந்தவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் என அனைவரும் அதிக அளவில் கலந்து கொண்டு கிராம சபைக் கூட்டத்தைச் சிறப்பிக்கக் கேட்டுக்கொள்கிறேன்.

Tags : Tamil Nadu government ,Gram Sabha ,Pudukottai district ,
× RELATED தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்...