பருவ மழைக்காலங்களில் நீர்தேங்கி நிற்பதால் நெல் சாகுபடியில் துத்தநாக சத்து பற்றாக்குறையை நிவர்த்தி செய்யலாம்

புதுக்கோட்டை, செப்.30: புதுக்கோட்டை மாவட்டத்தில் சாகுபடி மேற்கொள்ளப்படும் சம்பா நெற்பயிரில் பருவ மழைக்காலங்களில் தொடர்ந்து, நீர்தேங்கி நிற்பதால் ஏற்படும் துத்தநாக பற்றாக்குறையினை நிவர்த்தி செய்திட வேளாண்மை இணை இயக்குநர் (பொ) சக்திவேல் ஆலோசனை தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்பொழுது விவசாயிகள்சம்பா நெல் சாகுபடி தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சம்பா நெல் சாகுபடியில் நெற் பயிருக்கு தொடர்ந்து வயலில் நீர்தேக்கி வைப்பதினால், துத்தநாகசத்தானது, துத்தநாக சல்பைட்டாகவோ அல்லது துத்தநாககார்பனேட்டாகவோ மாற்றம் பெறுகிறது. இதனால் பயிருக்கு கிடைக்கக் கூடிய துத்தநாகத்தின் அளவு குறைந்து துத்தநாகச்சத்துப் பற்றாக்குறை ஏற்படுகிறது. இக்குறைபாட்டினை விவசாயிகள் கீழ்க்கண்டவாறு கண்டறிந்து மேலாண்மை முறைகளை கடைபிடித்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நெற்பயிரில் துத்தநாகச் சத்து குறைபாடு, நாற்று நட்ட பின் 3 முதல் 4 வாரத்திற்குள் காணப்படும். இளம் இலைகளில் நடுநரம்பு அடிப்புறத்திலிருந்து வெளுத்துக் காணப்படும். மேல்புறம் மற்றும் நடுப்பகுதி இலைகளில் பழுப்பு நிறப்புள்ளிகள் தோன்றும். இப்புள்ளிகள் ஒன்று சேர்ந்து இலை முழுதும் பழுப்படைந்து காய்ந்து விடும். இதனால் சிம்புகளின் எண்ணிக்கை குறைந்து காணப்படும். பயிர்கள் சீராக வளராமல் திட்டு திட்டாக வளர்ச்சி குன்றி காணப்படும். ஆனால் பயிர்கள் வளரும் போது இந்தக் குறைபாட்டு அறிகுறிகள் மறைந்தாலும் விளைச்சல் குறைவதற்கு வாய்ப்புள்ளது.

பயிர்ச்சாகுபடித் திட்டத்தில் தொடர்ந்து நெற்பயிரேயே சாகுபடி செய்யாமல், இடையிடையில் பயறுவகைப் பயிர்கள்போன்ற மாற்றுப் பயிர்களை சாகுபடி செய்திட வேண்டும். வயலில் தொடர்ந்து தண்ணீர் தேங்கியிருப்பது நெற்பயிரில்துத்தநாகப் பற்றாக்குறை ஏற்படுவதற்கான ஒருமுக்கிய காரணமாகும். எனவே நெற்பயிரின் வளர்ச்சி பருவத்திலும், பாற்றாக்குறை அறிகுறிகள் தென்படும்போதும், வயலில் தேங்கியுள்ள தண்ணீரை வடித்து, போதுமான ஈரப்பதம் மட்டும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

நடவிற்கு முன்னதாக ஏக்கருக்கு 10 கிலோ துத்தநாகசல்பேட்டை 20 கிலோ மணலுடன் கலந்து இட வேண்டும். அல்லது நடவிற்குமுன் துத்தநாக சல்பேட்டை (சிங்சல்பேட் கரைசலில் 10 நிமிடங்கள் நனைத்து நடலாம்.

துத்தநாகச் சத்து பற்றாக்குறை அறிகுறிகள் தென்பட்டால் 0.5 சத துத்தநாக சல்பேட் கரைசலை (அரை கிலோ/100 லிட்டர் நீரில்) 0,25 சதம் தெளித்த சுண்ணாம்புக் கரைசல் சேர்த்து தெளிக்க வேண்டும். ஒரு வார இடைவெளியில் 3 முறை தெளிக்க வேண்டும். எனவே புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் துத்தநாக பற்றாக்குறையினை நிவர்த்தி செய்து உயர் விளைச்சல் பெற்றுபயன்பெறுமாறு புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர்(பொ) சக்திவேல் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

Related Stories: