×

ரயில் நிலையங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு ரயில்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பிஎப்ஐ மற்றும் அதனை சார்ந்த அமைப்புகளுக்கு தடை எதிரொலி

வேலூர், செப்.30: பிஎப்ஐ மற்றும் அதனை சார்ந்த அமைப்புகளுக்கு தடை எதிரொலியால் ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு நிதி திரட்டியது, உள்நாட்டில் மத கலவரத்தை தூண்டுதல், இளைஞர்களை தீவிரவாத அமைப்பில் சேர ஊக்குவித்தல் போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கடந்த 22ம்தேதி நாடு முழுவதும் 15 மாநிலங்களில் என்ஐஏ மற்றும் அமலாக்கத்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தி பாப்புலர் பிரண்ட ஆப் இந்தியா என்ற அமைப்பை (பி.எப்.ஐ.) சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். இந்த நிலையில் பி.எப்.ஐ. அமைப்பும் அதன் சார்ந்த அமைப்புகளும் தேசவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக ஒன்றிய அரசு நேற்றுமுன்தினம் அவ்வமைப்புக்கும், அதன் சார்ந்த அமைப்புகளுக்கும் 5 ஆண்டுகள் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இந்த தடை எதிரொலியால் நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பும், கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் ஏற்கனவே பாஜ, ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உட்பட இந்து இயக்கங்களின் நிர்வாகிகள் வீடுகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் இஸ்லாமிய அமைப்புகள் உள்ள பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் சாதாரண உடைகளில் போலீசார் கண்காணிப்புப்பணியில் ஈடுபட்டுள்ளதுடன், ரோந்துப்பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் ஆயுதப்படை போலீசார் வாகனங்களுடன் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் ரயில் நிலையங்களில் எவ்வித அசம்பாவித சம்பவமும் நடந்து விடக்கூடாது என்பதற்காக ரயில்வே ஸ்டேஷன்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் காட்பாடி, அரக்கோணம், ஜோலார்பேட்டை உட்பட முக்கிய ரயில்நிலையங்களில் ரயில்வே போலீசாரும், துப்பாக்கி ஏந்திய ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து ரயில்வே போலீசார் கூறியதாவது: ஒவ்வொரு ரயில்வே காவல் நிலையத்திலும், கண்காணிப்பு பணிக்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் ரயில்களிலும், ஸ்டேஷன்களிலும் இரவு ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சென்னை, சேலம், திருச்சி ரயில்வே கோட்ட எல்லைப்பகுதிகளுக்கு உட்பட்ட ரயில் நிலையங்களுக்கு வடமாநிலங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்கள் வழியாக அதிக அளவில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் தமிழக ரயில்வே போலீசார் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக செல்லும் ரயில்களில் போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி கொண்டு சோதனையிட்டு வருகின்றனர். ரயில் நிலையங்களிலும், பிளாட்பாரத்தில் உள்ள பயணிகளின் உடமைகளையும் சோதித்து வருகின்றனர். சந்தேகப்படும்படி யாராவது வந்தால் அவர்களின் விவரங்களை போலீசார் சேகரித்து பின்னரே அவர்களை அனுப்பி வைக்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : BFI ,
× RELATED மோடி நிகழ்ச்சியின் போது இடையூறு 6 மாநிலங்களில் என்ஐஏ அதிரடி சோதனை