×

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு அனைத்து பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல்

நெல்லை, செப். 30:  வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக நெல்லை மாவட்டத்தில் அனைத்து பள்ளி கட்டிடங்களையும் ஆய்வு செய்து அக்.3ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டுள்ளார். நெல்லை கலெக்டர் அலுவலக சிறு கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் கலெக்டர் விஷ்ணு தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் விஷ்ணு பேசியதாவது: நெல்லை மாவட்டத்தைப் பொருத்தவரை மணிமுத்தாறு மற்றும் பாபநாசம் அணைகளின் நீர்வரத்து அதிகரிப்பதன் காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது.

எனவே, இந்த இரு அணைகளிலும் நீர்வரத்தை முறையாக கண்காணிக்க வேண்டும். மேற்குத் தொடர்ச்சி மலையில் பொழியும் அதிகப்படியான மழைப்பொழிவு பணகுடி பகுதியில் வௌ்ள அபாயத்தை ஏற்படுத்தும்.  நம்பியாற்றில் ஏற்படும் வௌ்ளமும் அபாயத்தை ஏற்படுத்தும் என்பதால் இவ்விரு பகுதிகளையும் கவனமுடன் கண்காணித்திட வேண்டும். நெல்லை மாநகர பகுதிகளைப் பொருத்தவரை கடந்த பருவமழை காலத்தில் வௌ்ளம் ஏற்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து, இந்த வருட மழைக்கு முன்னதாக கால்வாய்களில் அடைப்புகள் ஏதும் காணப்பட்டால் அவற்றை சரி செய்ய வேண்டும். அனைத்து பள்ளி கட்டிடங்களையும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி பொறியாளர்கள் மற்றும் பள்ளித் தலைமையாசிரியர்களுடன் ஆய்வு செய்து ஆய்வு அறிக்கையை வரும் அக் 3ம் தேதி (திங்கட்கிழமை)க்குள் தாக்கல் செய்ய வேண்டும்.

சேதமடைந்த நிலையில் மின்கம்பங்கள் ஏதும் காணப்பட்டால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு சரி செய்ய வேண்டும். சாலைகளில் உள்ள பாலங்களின் அடியில் மழைக்காலங்களில் எவ்வித தடங்கலுமின்றி மழைநீர் வடிந்து செல்லும் வண்ணம் நெடுஞ்சாலை பொறியாளர்கள் அனைத்து பாலங்களையும், உடன் ஆய்வு செய்து போர்க்கால அடிப்படையில் சீர் செய்ய வேண்டும். பருவமழை காலத்தில் வெள்ளம் அபாயம் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக மீட்பு பணியை மேற்கொள்வதற்கு தீயணைப்புத்துறை, காவல்துறை உள்ளிட்ட அனைத்துதுறை அலுவலர்களும் தேவையான உபகரணங்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.

கூட்டத்தில் நெல்லை எஸ்.பி. சரவணன், மாநகர துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய செல்லையா, சேரன்மகாதேவி சப் கலெக்டர்  ரிஷப், நெல்லை ஆர்டிஓ சந்திரசேகர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ்குமார் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags : North East ,
× RELATED வடகிழக்கில் 3 மாநிலங்களில்...