காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் எக்ஸ்ரே மெஷின் பழுது: சரிசெய்ய நோயாளிகள் வலியுறுத்தல்

காஞ்சிபுரம், செப்.30: காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பழைய எக்ஸ்ரே மெஷின் அடிக்கடி பழுதாகும் நிலையில் புதிதாக வந்த எக்ஸ்ரே மெஷினும் சுமார் 2 மாத காலமாக பழுதடைந்துள்ளதால் எக்ஸ்ரே எடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக நோயாளிகள் தெரிவிக்கின்றனர். காஞ்சிபுரம் அரசு தலைமை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு, பிரசவ பிரிவு, எக்ஸ்ரே பிரிவு, பச்சிளம் குழந்தைகள் பிரிவு, இயன்முறை சிகிச்சை பிரிவு, எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு, காது, மூக்கு தொண்டை பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் இயங்கி வருகின்றன. இந்த அரசு தலைமை மருத்துவமனைக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 200க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த உள் மற்றும் புற நோயாளிகள் என 2000க்கும் மேற்பட்டோர் தினந்தோறும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி அருகில் உள்ள ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நோயாளிகளும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், மருத்துவமனையின் அவசர சிகிச்சை மையம் அருகே எக்ஸ்ரே மையம் செயல்படுகிறது. இங்கு சாதாரண மற்றும் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவிகள் மூலம் நோயாளிகளின் உடலுக்குள் உள்ள பாதிப்புகளை கண்டறிகின்றனர். பொதுவாக தலை முதல் உள்ளங்கால் வரை உள்ள எலும்பு மற்றும் நரம்பு தொடர்பான பிரச்னைகளை கண்டறிவதற்கு எக்ஸ்ரே பரிசோதனை முக்கிய பங்காற்றுகிறது. வயிற்றில் உள்ள கட்டிகள், சிறுநீரகக் கற்கள், பித்தப்பைக் கற்கள் கண்டறிய என பல்வேறு நோய்களுக்கான பரிசோதனைகளிலும் உதவுகிறது. புற்றுநோய்க்கான சிகிச்சையிலும் பெரிதும் பயன்படுகின்றன. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த எக்ஸ்ரே மெஷின்கள் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் 2 மட்டுமே உள்ளது. இதில், 1 மெஷின் பத்து வருடங்களுக்கு மேலாக செயல்பட்டு வருகின்றது.

இந்த மெஷினில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் இயக்கப்பட்டு 150 எக்ஸ்ரேகள் வரை எடுக்கப்படுகிறது. அந்தவகையில், இதுவரை சுமார் 4 லட்சத்துக்கும் மேலான எக்ஸ்ரேக்கள் எடுக்கப்பட்டுள்ளது. தற்போது, அந்த மிஷனின் ட்யூப்புகள் மற்றும் கேபிள்கள் பழுதடைந்த நிலையில் அந்த மிசினை மேலும் கீழும், வலது இடது புறமாகவும் இயக்குவதற்கு கால தாமதம் ஆகின்றது. மிகவும் பழைய மிஷின் என்பதால் இதனுடைய மருத்துவ உதிரி பாகங்கள் கிடைப்பதற்கும் இயலாத நிலை உள்ளது. தற்போது, இந்த எக்ஸ்ரே மெஷின் மட்டும்தான் செயல்பட்டு வருகின்றது.

மேலும், கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு சாம்சங் நிறுவனம் சுமார் ₹60 லட்சம் மதிப்புள்ள எக்ஸ்ரே மிஷின், ஸ்கேன் அல்ட்ரா போனோ கிராம் மிஷின் உள்ளிட்ட சுமார் ₹1 கோடி 50 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை அரசு தலைமை மருத்துவமனைக்கு இலவசமாக வழங்கியது. இந்த எக்ஸ்ரே மெஷின் மூலம் ஒரு நாள் விட்டு ஒரு நாள்  சுமார் 110 நோயாளிகளுக்கு எக்ஸ்ரே எடுக்கப்படுகின்றது. அந்த புதிய எக்ஸ்ரே மிஷின்  சுமார் 45 நாட்களுக்கு மேலாக இயங்கவில்லை. சாம்சங் நிறுவனத்தின் நிபுணர்களை அழைத்தபோது பணம் ₹30 ஆயிரம் கட்டினால் தான் நாங்கள் வந்து அதில் என்ன பிரச்னை என கண்டறிந்து கூற முடியும் என உறுதியாக தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்த புதிய எக்ஸ்ரே மிஷின் வழங்கிய நாள் முதல் இதுவரை சிஎம்சி எனப்படும் உதிரி பாகங்கள் மாற்றுதல் மற்றும் பராமரிப்பு ஒப்பந்தத்தை மருத்துவமனை நிர்வாகம் போடாததால் சாம்சங் நிறுவன எக்ஸ்ரே மெஷின் தொடர்பான நிபுணர்கள் நேரில் வர மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் கல்பனாவிடம் கேட்டபோது, ‘சாம்சங் எக்ஸ்ரே மெஷின் பழுது நீக்கம் தொடர்பாக தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்திற்கு முறையாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மற்றொரு எக்ஸ்ரே மெஷின் மூலம் நோயாளிகளுக்கு எந்தத் தடையும் இல்லாமல் எக்ஸ்ரே எடுக்கப்படுகிறது. பழுது நீக்கம் செய்ய சாம்சங் நிறுவனத்துடன் சிஎம்சி ஒப்பந்தம் போடப்பட்டு உதிரி பாகங்களை மாற்றி பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

Related Stories: