காங்கயம் அருகே துணிகரம்: ஒரே இரவில் 7 வீடுகளில் திருட்டு

காங்கயம்,செப்.30: காங்கயம் அருகே ஒரே இரவில் 7 வீடுகளில் நடந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். காங்கயம் தாலுகா, நத்தக்காடையூர் பஞ்சாயத்துக்குட்பட்ட நஞ்சப்பகவுண்டன் வலசு கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ் (77). விவசாயி. நேற்று முன்தினம் நள்ளிரவில் இவர் வீட்டின் பின் பக்கம் உள்ள அறையில் தூங்கினார். முன்பக்கமாக மர்ம நபர் வீட்டினுள் புகுந்து பீரோவில் இருந்த ரூ.4 ஆயிரத்தை திருடி சென்றார். இதே பகுதியைச் சேர்ந்த சாமியாத்தாள் (52) வீட்டிலும் புகுந்த மர்ம நபர் ரூ.5 ஆயிரத்தை திருடி சென்றார். மேலும் மணி (52) என்பவரின் வீட்டில் ரூ.7 ஆயிரமும், சுப்பிரமணி (65) வீட்டில் ரூ.3 ஆயிரமும் திருடு போனது.

தாத்திக்காடு பகுதியில் பொன்னுசாமி (65) என்பவரது வீட்டில் ரூ.4 ஆயிரத்தையும், இதே பகுதியை சேர்ந்த அப்புக்குட்டி(72) வீட்டில் ரூ.5 ஆயிரம் மதிப்பில் பித்தளை பாத்திரங்களையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.  மேலும் ஒரு வீட்டிலும் திருட்டு நடந்துள்ளது. ஒரே நாள் இரவில் ஏழு வீடுகளில் திருட்டு நடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காங்கயம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: