மேட்டுப்பாளையத்தில் கடைகளுக்குள் பெட்ரோல் குண்டு வீசிய 3 பேர் கைது

கோவை, செப்.30:  கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வந்த நவீன் ப்ளைவுட்ஸ் ஹார்டுவேர்ஸ் கடை மற்றும் மேட்டுப்பாளையம் தபால் நிலையத்தின் அருகே உள்ள ஹோம் இண்டிரியர் கடைக்குள் கடந்த 22ம் தேதி அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். இது தொடர்பாக மேட்டுப்பாளையம் போலீசார் பொது சொத்துக்களை எரித்தல் மற்றும் சேதப்படுத்துதல் ஆகிய இரண்டு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து விசாரித்தனர். மேலும், குற்றவாளிகளை பிடிக்க மேட்டுப்பாளையம் டிஎஸ்பி பாலாஜி  தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

விசாரணையில், மேட்டுப்பாளையம் எஸ்டிபிஐ கட்சியின் உறுப்பினர்களாக இருக்கும் மேட்டுப்பாளையம் சிராஜ் நகரை சேர்ந்த  நஜீர் அகமது (30)  அண்ணா ஜிராவ் ரோடு பகுதியை சேர்ந்த  சேக் பரித் (30) சாய்பாபா கோவில் வீதியை சேர்ந்த முகமது தௌபிக் (25) ஆகிய 3 பேர் கடைகளுக்குள்  பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மூவரையும் கைது செய்தனர்.   இவ்வழக்கில் குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீசாரை உயரதிகாரிகள் பாராட்டினர்.

Related Stories: