தசரா திருவிழாவிற்காக வேடமணிந்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

சாயல்குடி, செப்.30: தூத்துக்குடி மாவட்டம், குலசேகரபட்டிணத்தில் புகழ்பெற்ற முத்தாரம்மன் உடனுரை ஞான மூர்த்தீஸ்வரர் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் நவராத்திரி விஷேச காலத்தில் திருவிழா மற்றும் சூரசம்ஹாரம் நடப்பது வழக்கம். இதில் கலந்து கொள்ளும் பக்தர்கள் பல்வேறு வேடமணிந்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். இதற்காக அந்தந்த பகுதியை சேர்ந்தவர்கள் குழு அமைத்து 41 நாள் விரதமிருந்து திருவிழா நடத்தி வருகின்றனர். அதன்படி கடலாடி அருகே புரசங்குளம் காமாட்சியம்மன் தசரா குழு சார்பாக காளி, மாடன், கருப்பன், விநாயகர், முருகன், ஆஞ்சநேயர், மீனாட்சியம்மன், நாகதேவதை, முனிவர்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட வேஷமிட்டு முத்து எடுக்கும் நிகழ்ச்சி குருநாதர் முனியசாமி தலைமையில் நடந்தது.

கடலாடி, ஆப்பனூர், மங்களம், புனவாசல், கொண்டுநல்லான்பட்டி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீடு வீடாக சென்று முத்து எடுத்தும், அருள்வாக்கு கூறியும்,அம்மனுக்கு பிடித்த சிம்பலக்க கொட்டு, உருமி மேளம் முழங்க கிராமங்களை ஊர்வலமாக வலம் வந்தனர். உலகநன்மை வேண்டியும், மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி முத்தாரம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: